டிக் டாக் செயலி விரைவில் ப்ளே ஸ்டோருக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Chennai: டிக் டாக் செயலி மீதான தடையை நிபந்தனையுடன் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை நீக்கியுள்ளது. இதனால் டிக் டாக் செயலி விரைவில் ப்ளே ஸ்டோருக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சர்வதேச அளவில் பிரபலமாக உள்ள டிக் டாக் செயலி ஆபாசத்தை பரப்புவதாக கூறி அதற்கு தடை விதிக்க வலியுறுத்தி மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் முத்துக்குமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் செயலிக்கு தற்காலிக தடை விதித்து உத்தரவிட்டது.
இதனால் மத்திய அரசின் அறிவுறுத்தலை தொடர்ந்து டிக் டாக் செயலி ப்ளே ஸ்டோரில் இருந்து நீக்கம் செய்யப்பட்டது. இதனால் லட்சக்கணக்கான டிக் டாக் செயலி பயன்பாட்டாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் டிக் டாக்கை உருவாக்கிய பைட் டான்ஸ் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதிகள் இன்றைக்குள் உயர் நீதிமன்ற மதுரை கிளை இறுதி முடிவு எடுக்காவிட்டால், டிக் டாக் செயலி மீதான தடை நீக்கப்படுவதாக கொள்ளப்படும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.
இந்த நிலையில், வழக்கு இன்று மீண்டும் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆபாசத்தை பரப்பும் வீடியோக்கள், சமூக சீர்கேடுகளை ஏற்படுத்தும் வீடியோக்கள் உள்ளிட்டவற்றை பதிவிறக்கம் செய்யக் கூடாது என்ற நிபந்தனையுடன் டிக் டாக் செயலி மீதான தடையை நீக்கியுள்ளது.
இதையடுத்து விரைவில் டிக் டாக் செயலி ப்ளே ஸ்டோர் உள்ளிட்ட இடங்களில் மீண்டும் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.