இந்திய அரசாங்கத்தால் தடைசெய்யப்பட்ட 59 சீன செயலிகளில் டிக்டோக் ஒன்றாகும்
ஹைலைட்ஸ்
- சீனாவின் 59 செயலிகளுக்கு மத்திய அரசு அதிரடியாக தடைவிதித்தது
- டிக்டாக் செயலியின் ஊழியர்களுக்கு கடிதம் ஒன்றினை எழுதியுள்ளார்.
- எங்கள் ஊழியர்கள் எங்கள் மிகப்பெரிய பலம்
New Delhi: கடந்த மாதம் கிழக்கு லடாக்கின் கால்வான் பள்ளத்தாக்கில் நடைபெற்ற இந்திய-சீன ராணுவ வீரர்களிடையேயான மோதலில் 20 இந்திய வீரர்கள் உயிரிழந்ததையடுத்து, சமீபத்தில் இந்தியா முழுவதும் சீனாவின் 59 செயலிகளுக்கு மத்திய அரசு அதிரடியாக தடைவிதித்தது. இந்நிலையில் தடை விதிக்கப்பட்ட செயலியில் ஒன்றான டிக்டாக் செயலியின் தலைமை நிர்வாக அதிகாரி கெவின் மேயர் இந்தியாவில் உள்ள டிக்டாக் செயலியின் ஊழியர்களுக்கு கடிதம் ஒன்றினை எழுதியுள்ளார். அதில்,
"டிக்டாக்கில், இணையத்தை ஜனநாயகமயமாக்குவதற்கான எங்கள் உறுதிப்பாட்டால், எங்கள் முயற்சிகள் வழிநடத்தப்படுகின்றன. பெரிய அளவில், இந்த முயற்சியில் நாங்கள் வெற்றி பெற்றுள்ளதாக நம்புகிறோம். இருப்பினும், நாங்கள் எங்கள் பணியில் உறுதியுடனும் இருக்கிறோம். பங்குதாரர்களுடன் இணைந்து செயல்படுகிறோம் எனவே ஊழியர்கள் கவலையடைய வேண்டாம்.“ என குறிப்பிடப்பட்டுள்ளார்.
"இந்தியாவில் உள்ள எங்கள் ஊழியர்களுக்கு ஒரு செய்தி" என்ற தலைப்பில், தலைமை நிர்வாக அதிகாரி கெவின் மேயர், "2018 முதல், இந்தியாவில் 200 மில்லியனுக்கும் அதிகமான பயனர்கள் தங்கள் மகிழ்ச்சியையும் படைப்பாற்றலையும் வெளிப்படுத்தவும், சுய வெளிப்பாட்டைக் கொண்டாடவும், மற்றும் வளர்ந்து வரும் உலகளாவிய சமூகத்துடன் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளவும் டிக்டாக்கை பயன்படுத்தி வருகிறார்கள். எங்கள் ஊழியர்கள் எங்கள் மிகப்பெரிய பலம், அவர்களின் நல்வாழ்வுதான் எங்கள் முன்னுரிமை. 2,000க்கும் அதிகமான ஊழியர்களை நாங்கள் கொண்டிருக்கின்றோம். எனவே அவர்களின் வாழ்வாதாரத்தினை மீட்டெடுப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் நாங்கள் மேற்கொள்வோம்.“ என கெவின் தெரிவித்துள்ளார். மேலும்,
“பயனாளர்களாலும், ஊழியர்களாலும் நாங்கள் பெரும் ஊக்கம் பெற்றுள்ளோம். டிஜிட்டல் இந்தியாவின் மெயின்பிரேமில் தொடர்ந்து செயல்படுவதை நாங்கள் எதிர்நோக்குகிறோம். கலைஞர்கள், கதைசொல்லிகள், கல்வியாளர்கள் போன்றோரின் படைப்புகளை நாடு முழுவதும் உள்ள பல லட்சக்கணக்கான மக்களிடத்தில் நாம் கொண்டு சேர்த்துள்ளோம். உலகளாவிய அரங்கில் தங்கள் திறமைகளை பகிர்ந்து கொள்ளும்போது, இந்த கலைஞர்கள் பல வாய்ப்பினை பெற்றுள்ளனர். இன்று, நாடு முழுவதும் உள்ள தொலைதூர நகரங்கள் மற்றும் கிராமங்களில் கூட டிக்டாக் பல வாய்ப்புகளை வெளி கொணர்ந்துள்ளது.“ என்று குறிப்பிட்டுள்ளார்.
சமீபத்தில், சீனாவின் குறிப்பிட்ட 59 செயலிகள் ஸ்பைவேர் அல்லது தீம்பொருளாகப் பயன்படுத்தப்படுவதாகவும் உளவுத்துறை நிறுவனங்களின் எச்சரிக்கையைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அரசு தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக பிரதமர் "ஆத்மா நிர்பர் பாரத்" என்கிற, உள்நாட்டு பொருட்களை வாங்கும் இயக்கத்தின் பிரச்சாரத்தினை முன்னெடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.