4 லட்சம் மருத்துவ பாதுகாப்பு உபகரணங்களை வழங்குகிறது டிக் டாக்.
ஹைலைட்ஸ்
- இந்தியாவில் 25 கோடிப்பேர் டிக்டாக் செயலியை பயன்படுத்துகின்றனர்
- கொரோனா நிவாரண நிதியாக 4 லட்சம் மருத்துவ பாதுகாப்பு கருவிகள் வழங்குகிறது
- மருத்துவ பாதுகாப்பு கருவிகளின் மதிப்பு ரூ. 100 கோடி
New Delhi: பிரபல பொழுதுபோக்கு மற்றும் வீடியோ பரிமாற்ற செயலியான டிக் டாக், இந்தியாவில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் மருத்துவர்கள் மற்றும் பணியாளர்களுக்கு 4 லட்சம் பாதுகாப்பு உபகரணங்களை வழங்கப்போவதாக அறிவித்துள்ளது. இதன் மதிப்பு ரூ. 100 கோடி.
இந்தியாவில் மிக அதிகம் பயன்படுத்தப்படும் ஆப்-களில் டிக் டாக்கும் ஒன்று. சிறு குழந்தைகள் முதல் முதிர்ந்த பெரியோர் வரை இந்த ஆப்பை பயன்படுத்தி அடிக்கும் லூட்டிகள் வைரலாகி வருகின்றன. சிலருக்கு இந்த ஆப் இல்லாவிட்டால் பைத்தியமே பிடித்து விடும் என்கிற அளவுக்கு டிக்டாக் மேல் ஆர்வம் கொண்டவர்களாக இருக்கின்றனர்.
கோடிக்கணக்கானோர் பயன்படுத்துவதால், அதன் மூலம் டிக்டாக்கிற்கு நல்ல வருமானம் கிடைக்கிறது. இந்த நிலையில், கொரோனா பரவுதலை தடுப்பதற்காகவும், அதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவி செய்வதற்காகவும் பல்வேறு நிறுவனங்கள் நிதியுதவி அளித்து வருகின்றன. டாடா நிறுவனம் சார்பாக ரூ. 1500 கோடி வழங்கப்பட்டுள்ளது.
இதேபோன்று நடிகர்கள், விளையாட்டு வீரர்கள், விஐபிக்கள் உள்ளிட்டோர் தனிப்பட்ட முறையில் நிவாரணத் தொகை அளித்து வருகின்றனர்.
அந்த வகையில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களுக்கு 4 லட்சம் பாதுகாப்பு உபகரணங்களை வழங்கப்போவதாக டிக் டாக் நிறுவனம் அறிவித்துள்ளது. இதன் மதிப்பு ரூ. 100 கோடி.
இதுதொடர்பாக தகவல் வெளியிட்டுள்ள டிக்டாக், 20,675 பாதுகாப்பு உபகரணங்கள் இன்று காலை வந்து விட்டதாகவும், அடுத்த கட்டமாக 1,80,375 உபகரணங்கள் சனிக்கிழமைக்குள் வந்து விடும் என்றும், மீதமுள்ள 2 லட்சம் மருத்துவ பாதுகாப்பு உபகரணங்கள் வெகு விரைவில் கைக்கு வந்து விடும் என்றும் தெரிவித்துள்ளது.
டிக் டாக்கை இந்தியாவில் மட்டும் 25 கோடி பேர் பயன்படுத்துவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. டிக் டாக்கும் கொரோனா குறித்து பல்வேறு விழிப்புணர்வுகளை மேற்கொண்டுள்ளது.
இந்தியாவில் கடந்த மார்ச் 25-ம் தேதி முதற்கொண்டு ஊரடங்கு உத்தரவை நடைமுறையிலிருந்து வருகிறது.கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 1,600-யை தாண்டியுள்ள நிலையில் பலி எண்ணிக்கையும் 38 ஆக உயர்ந்திருக்கிறது.