டிக் டாக் தடை: தரவு பாதுகாப்பு குறித்து தெளிவுப்படுத்துவதற்கு அரசு தரப்பில் அழைப்பு!
New Delhi: சீனாவுடன் தொடர்புடைய 58 செயலிகளுடன் டிக் டாக்கு செயலியும் நேற்றைய தினம் தடைசெய்யப்பட்ட நிலையில், அரசு உத்தரவுகளுக்கு இணங்குவதாக டிக் டாக் இந்தியா இன்று தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக பிரபல குறுகிய வீடியோ சேவை நிறுவனமான டிக்டாக் இந்தியா கூறும்போது, இந்திய சட்டத்தின் கீழ் தரவு தனியுரிமை மற்றும் பாதுகாப்புத் தேவைகளுக்கு தொடர்ந்து இணங்குகிறோம் என்றும், இந்திய பயனர்களின் எந்த தகவலையும், சீன அரசு உட்பட எந்த வெளிநாட்டு அரசுடனும் பகிர்ந்துகொள்ளவில்லை என்றும் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, டிக் டாக் இந்திய தலைமை அதிகாரி நிகில் காந்தி வெளியிட்டுள்ள அறிக்கையில், விளக்கங்களை சமர்ப்பிப்பதற்கும், பதிலளிப்பதற்கும் ஒரு சந்தர்ப்பமாக அரசு பிரதிநிதிகளை சந்திப்பதற்கு நாங்கள் அழைக்கப்பட்டுள்ளோம் என்று அவர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாடு, இந்தியாவின் பாதுகாப்பு, பொது ஒழங்கு பாதுகாப்புக்காக பாரபட்சமற்ற செயல்களில் ஈடுபடும் வகையில், டிக் டாக், யூசி பிரவுசர், வீ சேட், சேர்இட், கேம் ஸ்கேனர் உள்ளிட்ட சீன செயிலகள் இந்திய அரசால் தடை செய்யப்பட்டதாக அரசு தெரிவித்துள்ளது.
கடந்த ஜூன் 15ம் தேதி லடாக்கில் இந்தியா - சீனா ராணுவ வீரர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் 20 இந்திய வீரர்கள் உயிரிழந்ததை தொடர்ந்து, இரு நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட பதற்றத்திற்கு மத்தியில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த செயலிகள் பயனர்களின் தனியுரிமையில் சமரசம் செய்துள்ளதாகவும், அவை ஸ்பைவேர் அல்லது மால்வேர் பயன்படுத்துவதாகவும் புலனாய்வு அமைப்புகளின் தகவல்கள் தெரிவித்துள்ளன.
எல்லைப் பிரச்சினையில் சீனாவுக்கு இந்தியா தகுந்த பதிலடி அளித்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஞாயிற்றுக்கிழமை தெரிவித்திருந்தார். மேலும், சீனப் பொருட்களைப் புறக்கணிப்பதற்கான நாடு தழுவிய அழைப்பு குறித்தும் அவர் பேசியிருந்தார்.
அதேபோல், இறக்குமதியைச் சார்ந்திருப்பதைக் குறைக்கும் வகையில் அரசின் "ஆத்மா நிர்பர் பாரத் (சுயசார்பு இந்தியா)" பிரச்சாரத்தையும் அவர் வலியுறுத்தினார். "நாம் உள்ளூர் பொருட்களையே வாங்குவோம், உள்ளூர் மக்களுக்காக குரல் கொடுப்போம், இது இந்தியா வலுவாக இருக்க உதவும்" என்று அவர் கூறினார்