हिंदी में पढ़ें Read in English
This Article is From Feb 28, 2020

பனிக்கட்டிக்கு அடியில் சிக்கிக்கொண்ட டிக் டாக் பிரபலம்! திக் திக் நிமிடங்கள்!

இதுநாள் வரை மரணத்தை இவ்வளவு நெருங்கி பார்த்ததில்லை என்று டிக் டாக் பிரபலமான ஜாசன் கிளார்க் தெரிவித்துள்ளார்.

Advertisement
இந்தியா Edited by

தனது சாகசத்தை படம் பிடித்துகொண்டிருந்த போது டிக் டாக் பிரபலமான ஜாசன் கிளார்க் பனிக்கட்டிக்கு அடியில் சிக்கிக்கொண்டார்.

Highlights

  • சாவை நெருங்கி பார்த்த டிக் டாக் பிரபலம்
  • இந்த சாகசத்தை மீண்டும் செய்ய மாட்டேன் என கூறியுள்ளார்.
  • பனிக்கட்டிக்கு அடியில் சிக்கிக்கொண்டார்.

சமூகவலைத்தளங்களில் தனது சாகசத்தைப் பதிவு செய்யப் படம் பிடித்துக்கொண்டிருந்த போது, மரணத்தை நெருங்கிப் பார்த்ததாக டிக் டாக் பிரபலர் ஜாசன் கிளார்க் தெரிவித்துள்ளார். 

டிக் டாக்கில் 4 லட்சத்திற்கும் அதிகமான ஃபாலோவர்ஸை கொண்ட ஜாசன் கிளார்க் தனது இன்ஸ்டாகிராமில் மரணத்தை நெருங்கிப் பார்த்த அனுபவத்தை விரிவாக விவரித்துப் பதிவிட்டிருந்தார். அதில், பனிக்கட்டிக்கு அடியில் தான் சிக்கிக்கொண்டதாகவும், கடைசி நொடி வரை வெளியே வருவதற்கான வழி தெரியவில்லை என்றும் தெரிவித்துள்ளார். மேலும், இந்த சாகசத்தை மீண்டும் தான் முயற்சி செய்யப்போவதில்லை என்றும் ஜாசன் குறிப்பிட்டுள்ளார். 

இதுநாள் வரை மரணத்தை இவ்வளவு நெருங்கிப் பார்த்ததில்லை என்று மனதை பதைபதைக்க வைக்கும் வீடியோவை பதிவிட்டு ஜாசன் குறிப்பிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் பதிவிட்டிருந்த அந்த வீடியோவில், உரைந்து காணப்படும் நதி ஒன்றில் உள்ள ஒரு சிறு ஓட்டை வழியாக அந்த பனிக்கட்டிகளுக்கு அடியில் நீந்திச் செல்கிறார். 

பனிக்கட்டிகளுக்கு அடியில் ஒரு சில விநாடிகள் நீந்திச் செல்லும் அவர், மேலும் செல்ல முடியாமல் வந்த பாதையில் மீண்டும் திரும்பி நீந்தி வருகிறார். அப்போது, அவர் வந்த பாதையை அவரால் கண்டறிய முடியவில்லை. ஒரு கட்டத்தில் பனிக்கட்டிகளை அவர் உடைக்கவும் முயற்சி செய்கிறார் எனினும், அதுவும் பலனளிக்கவில்லை. 

இதுதொடர்பாக அவர் கூறும்போது, பனிக்கட்டிகளுக்கு அடியில் இருக்கும்போது, தண்ணீருக்கும் பனிக்கட்டிகளுக்கும் வித்தியாசம் தெரியவில்லை. இதனால், ஏற்பட்ட குழப்பத்தில் நான் வந்த வழியை அடைந்துவிட்டதாக நினைத்தேன். ஆனால், அதிலிருந்து வெளியேற முடியவில்லை. இதையடுத்து, பனிக்கட்டிகளை உடைக்க முற்படுகிறார். அதுவும் அவரால் முடியவில்லை. 

Advertisement

இதுதொடர்பாக ஜாசன் கூறும்போது, ஒரு கட்டத்துக்கு மேல் நீந்த முடியாமல் போனதும் வந்த வழியே ஏற்பட்ட தண்ணீர் கலங்கல்களை வைத்து மீண்டும் சென்றுவிடலாம் என்று எண்ணினேன். ஆனால், அது என்னைத் தவறான பாதைக்குக் கொண்டு சென்றது. அப்போது, அந்த வீடியோவில் பார்த்தால் தெரியும் நான் எனது முதுகை வைத்து பனிக்கட்டிகளை உடைக்க முயற்சிப்பேன். 

கடைசியாக முயன்று பார்ப்போம் என்று மீண்டும் என் கைகளை நீட்டியே படியே நீந்திய போது அங்கு அது பனியின் இலகுவான இடமாகத் தெரிந்தது. உடனடியாக கை இருக்கும் பக்கம் வழியாக எழுந்து நின்றதும் தான் எனக்கு உயிரே திரும்பியது. வெளியே வந்ததும் அவர் வேகமாக மூச்சுவிடுவது வீடியோவில் தெரிகிறது. 

Advertisement

மேலும், ஜாசன் தனது பதிவில், வீடியோவைப் படம்பிடித்த நபரால் எனது நிலைமையின் தீவிரத்தைப் புரிந்து கொள்ள முடியவில்லை, அவர் அதனை நகைச்சுவையாக நினைத்துக்கொண்டதாகக் குறிப்பிட்டுள்ளார். 

ஜாசன் கிளார்க் பதிவிட்ட இந்த வீடியோ டிக் டாக்கில் 21 மில்லியன் பார்வையாளர்கள் பார்த்துள்ளனர். இன்ஸ்டாகிராமில் 1.6 லட்சம் பேர் பார்த்துள்ளனர். 

Advertisement