Tirumavalavan Takes on Seeman- முன்னதாக திருமாவளவன், சீமானுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துவிட்டார் என்று கூறப்பட்டது
Tirumavalavan Takes on Seeman: முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி (Rajiv Gandhi) பற்றி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் (Seeman) பேசியது பூதாகரமாகியுள்ள நிலையில், அந்த விவகாரத்தில் தனது நிலைப்பாடு என்ன என்பது குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாளவன் தெரிவித்துள்ளார்.
முன்னதாக திருமாவளவன், சீமானுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துவிட்டார் என்று கூறப்பட்ட நிலையில், இன்று செய்தியாளர்கள் சந்திப்பில், “ராஜிவ் காந்தி பிரதமராக இருந்தபோது, இலங்கைக்கு இந்திய அமைதிப் படை அனுப்பப்பட்டது. அந்தப் படை, அங்கிருந்த தமிழர்களுக்கு எதிராக செயல்பட்டது. அதன் பிறகு தமீழழ விடுதலைப் புலிகள் அமைதிப் படையை எதிர்த்துப் போரிட வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டது. இந்த அனைத்தும் வரலாறு. இந்த விவகாரம் குறித்து சீமான் சொன்ன கருத்தை நான் ஆமோதிக்கிறேன் என்றுதான் சொன்னேன்.
அதே நேரத்தில் ராஜிவ் காந்தி கொலை குறித்து அவர் சொன்னதை என்னால் ஏற்க முடியாது. நான் மட்டும் அல்ல, விடுதலைப் புலிகளே அதை அவர்கள்தான் செய்தார்கள் என்று பகிரங்கமாக தெரிவித்ததில்லை. அண்ணன் பிரபாகரன் முதல் விடுதலைப் புலிகள் அமைப்பின் பலரும், அந்த விவகாரம் அவர்கள் மீது பின்னப்பட்ட சர்வதேசச் சதி என்று தொடர்ந்து சொல்லி வருகிறார்கள்“ என்று விளக்கினார்.
முன்னதாக சீமான், “காந்தியை, கோட்சே சுட்டார். அவர் சுட்டது சரிதான் என்று தொடர்ந்து பேசி வருகிறார்கள். பொது வெளியில் தொடர்ச்சியாக அது குறித்து கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
அதே மாதிரிதான் ராஜிவ் காந்தியைக் கொன்றோம். அதுவும் சரிதான்” என்று பேசினார்.
சீமானுக்கு எதிராக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பிரமுகர்கள் விக்கிரவாண்டி தொகுதிக்கு உட்பட்ட காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளதைத் தொடர்ந்து 2 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையம் சார்பிலும் சீமானுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.