தேமுதிக மற்றும் தமாகா ஆகிய கட்சிகளும் அதிமுக கூட்டணியில் இணையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
ஹைலைட்ஸ்
- அதிமுக கூட்டணியில் பாமக, பாஜக உள்ளன
- பாமக-வுக்கு கூட்டணியில் 7 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன
- பாஜக-வுக்கு கூட்டணியில் 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளனஜ
அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாமக மற்றும் பாஜக சேர்ந்துள்ளன. இன்னும் தேமுதிக மற்றும் தமாகா ஆகிய கட்சிகளும் கூட்டணியில் இணையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் தேமுதிக-வுக்கு காங்கிரஸ் தரப்பிலும் திமுக கூட்டணியில் இணையுமாறு அழைப்பு விடுக்கப்பட்டு வருவதாக தகவல் கசிந்தது. இதை உறுதிபடுத்தும் விதத்தில் முன்னாள் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், விஜயகாந்தை இன்று நேரில் சென்று சந்தித்தார்.
தேமுதிக, அதிமுக பக்கமா அல்லது திமுக பக்கம் சாயுமா என்ற கேள்வி தமிழக அரசியல் களத்தில் பரபரத்துக் கொண்டிருக்கும் நிலையில், திருநாவுக்கரசரின் திடீர் விசிட் முக்கியத்துவம் பெற்றது. விஜயகாந்தை சந்தித்தப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார் திருநாவுக்கரசர்.
அப்போது, ‘விஜயகாந்தின் உடல்நிலை விசாரிப்பதற்காகத்தான் வந்தேன். எனக்கு அவர் 35 ஆண்டுகளாக நண்பர். அந்த அடிப்படையில்தான் இன்று பார்க்க வந்தேன். அவரது உடல்நிலை நல்ல முன்னேற்றம் அடைந்துள்ளது. இன்னமும் அவர் நலம் பெற்று பூரண குணமடைய வேண்டும் என விரும்புகிறேன்.
அவர் ஒரு அரசியல் கட்சியின் தலைவர். நானும் ஒரு அரசியல்வாதி. இருவரும் சந்திக்கும்போது அரசியல் குறித்து பேசவில்லை என்று சொன்னால், அது பொய்யாக இருக்காதா..? ஆம், நாங்கள் அரசியல் குறித்து பேசினோம். நாட்டு அரசியல், தமிழக அரசியல், தேர்தல் அரசியல், நடப்பு நிலவரும், மக்களின் எண்ண ஓட்டம் என பல்வேறு விஷயங்கள் குறித்து பேசினோம்' என்றவரிடம்,
‘திமுக கூட்டணியில் தேமுதிக இடம்பெறுமா' என்று கேள்வி எழுப்பப்பட்டது, அதற்கு அவர் ‘நான் முன்னர் கூறியது போல பொது விஷயங்கள் குறித்துப் பேசினோம். மக்கள் விரும்பும்படி ஒரு முடிவெடுத்தால் நன்றாக இருக்குமென அவரிடத்தில் சொல்லி இருக்கிறேன். இதற்கு மேல் என்னால் ஒன்றும் சொல்ல இயலாது' என்று கூறி ஜூட் விட்டார்.