திருவாரூரில் இந்த மாதம் 28 ஆம் தேதி இடைத் தேர்தல் நடக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து திமுக, அமமுக உள்ளிட்ட கட்சிகள் தங்களது வேட்பாளர்களையும் அறிவித்தது. ஆனால், இன்று திடீரென்று, ‘திருவாரூர் இடைத் தேர்தல் ரத்து செய்யப்படுகிறது' என்று தேர்தல் ஆணையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்திரராஜன், ‘தேர்தல் ஆணையம் தெளிவான முடிவெடுத்துள்ளது. அவர்கள் உள்துறையிடம் கருத்து கேட்டிருக்கிறார்கள். மாவட்ட ஆட்சியரிடமும், ஆணையம் கருத்து கேட்டிருக்கிறது. ஆட்சியர், கட்சிகளிடம் இது குறித்து பேசியுள்ளார். அந்தக் கருத்தின் அடிப்படையில் இன்று ஒரு முடிவெடுக்கப்பட்டுள்ளது. ஆனால், அவசரப்பட்டு திருவாரூருக்கு மட்டும் தேர்தல் அறிவித்திருக்க வேண்டுமா என்பது முக்கியக் கேள்விதான்.
ஆனால், இதிலும் சதி உள்ளதாக எதிர்கட்சிகள் எப்படி சொல்ல முடியும். எதிர்கட்சிகளும் அவர்கள் கூட்டணியில் இருப்பவர்களும்தான் தேர்தல் ஆணையத்திடம் மனு கொடுக்கிறார்கள். வழக்கும் போடுகிறார்கள். ஆனால், தேர்தல் ரத்துக்கு பாஜக-வை குறை கூறுவது ஏன்?' எனக் கேள்வி எழுப்பினார்.
அவர் தொடர்ந்து, ‘முன்னர் இடைத் தேர்தல், புயல் வரும் என்று கணித்துத் தவிர்க்கப்பட்டது. ஆனால், இப்போதோ புயல் பாதிப்பையும் பொருட்படுத்தாமல் தேர்தல் அறிவித்தது சற்று வியப்பாகத்தான் இருக்கிறது. இருப்பினும், தற்போதாவது நடவடிக்கை எடுத்தார்களே என்று மகிழ்ச்சியடையலாம்' என்று கருத்து கூறினார்.