எதற்கு இடைத் தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டது என்று யோசிப்பதற்கு முன்னரே, ரத்து அறிவிப்பும் வெளியாகியுள்ளது. ஏன் திருவாரூர் இடைத் தேர்தல் தேதி மட்டும் ‘முந்திரிக் கொட்டை'-ப் போல அறிவிக்கப்பட்டது என்பதுதான் இன்று அரசியல் நோக்கர்களை குடையும் கேள்வி.
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் நாம் தமிழர் கட்சி ஆகியவை மட்டுமே இடைத் தேர்தல் வேட்பாளர்களை அறிவித்தன. களத்தில் பிரதான போட்டியாளர்களாக இருப்பர் என்று எதிர்பார்க்கப்பட்ட பாஜக-வும், ஆளுங்கட்சியான அதிமுக-வும் எந்த வித டென்ஷனும் இல்லாமல் ஹாயாக இருந்தனர். இந்த சலனமற்றத் தன்மையே பல கேள்விகளை எழுப்புகின்றன. குறிப்பாக கடந்த வெள்ளிக் கிழமையன்று திமுக, தனது வேட்பாளராக திருவாரூர் மாவட்டச் செயலாளர் பூண்டி கலைவாணனை அறிவித்தபோதே, அதிமுக-வின் வேட்பாளரும் அறிவிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ‘எப்படியும் தேர்தலை ரத்து செய்யத்தான் போகிறார்கள்' என்று தெரிந்ததாலோ என்னவோ, எந்த வித ரியாக்ஷனும் இல்லாமல் இருந்தது ஆளுங்கட்சி.
இது ஒரு புறமென்றால், பாஜக-வின் மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்திரராஜன் தேர்தல் ரத்து அறிவிப்பு வெளியானவுடன் முதல் ஆளாக வந்து, ‘திருவாரூர் இடைத் தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது சரியே. தேர்தல் ஆணையம் தெளிவான முடிவை எடுத்துள்ளது. இதிலும் பாஜக-வின் சதி உள்ளதாக எதிர்கட்சிகள் எப்படி சொல்ல முடியும். எதிர்கட்சிகளும் அவர்கள் கூட்டணியில் இருப்பவர்களும்தான் தேர்தல் ஆணையத்திடம் மனு கொடுக்கிறார்கள். வழக்கும் போடுகிறார்கள். ஆனால், தேர்தல் ரத்துக்கு பாஜக-வை குறை கூறுவது ஏன்?' எனக் கேள்வி எழுப்பினார்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலினோ, ‘அனைத்துக் கட்சிகள் மற்றும் பொதுமக்கள் விருப்பம் தெரிவித்துள்ளதற்கு இணங்க திருவாரூர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டிருப்பதை அனைவரும் வரவேற்பார்கள். நாடாளுமன்றத் தேர்தலோடு சேர்த்து 'மினி சட்டமன்றத் தேர்தல்' என்று சொல்லுமளவுக்கு 20 தொகுதிகளுக்கும் இடைத் தேர்தலை நடத்திட வேண்டும்' என்ற அறிக்கை வெளியிடுகிறார்.
ஆக, பாஜக, அதிமுக, திமுக என அனைவரும், இடைத் தேர்தல் ரத்தானதால் குஷி மோடில்தான் உள்ளனர். ஏனென்றால் பாஜக, ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் போன்று இந்த முறையும் நோட்டாவைவிட குறைவான வாக்குகள் பெற்றால், அடுத்து வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு அது பெரிய அடியாக இருக்கும். எடப்பாடி பழனிசாமி தலைமையை அதிமுக ஏற்க வேண்டுமென்றால், அவர் இந்தத் தேர்தலில் எப்பாடுபட்டாவது வென்றேயாக வேண்டும் என்ற நிர்பந்தத்தில் இருந்தார். முன்னர் நடந்த இடைத் தேர்தலிலேயே டெபாசிட் இழந்ததால், இந்த முறையாவது ‘திமுக-வின் கோட்டை' எனப்படும் திருவாரூர் தொகுதியில் ஜெயித்து, அடுத்த வரவுள்ள தேர்தலுக்கு அடித்தளம் அமைக்க வேண்டிய கட்டாயத்தில் ஸ்டாலின் இருந்தார். இல்லையென்றால் கடம்பூர் ராஜூவைப் சொன்னதைப் போல கடைசி வரை ஸ்டாலின், ‘கனவு முதல்வராக' மட்டுமே இருக்க முடியும்.
“திமுக-வுக்கு தற்போது செல்வாக்கு அதிகமாக இருப்பதாகவே எங்கள் கட்சியின் தலைமை கருதுகிறது. அதே நேரத்தில் அதிமுக-வுடன் கூட்டணி சேர்ந்தால் மட்டும், அது வெற்றி வாய்ப்பைத் தேடித் தரும் என்றும் சொல்வதற்கில்லை. ஆகவே, அதிமுக-வை அச்சுறுத்தும் நோக்கில்தான் இந்தத் தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டு ரத்து செய்யப்பட்டுள்ளது” என்று பாஜக வட்டாரங்கள் பரபரக்கின்றன.
மேலும் இவ்விவகாரத்தைத் தெளிவுபடுத்திக் கொள்ள அதிமுக தலைமைக் கழக நிர்வாகி ஒருவரிடம் பேசினோம், “நாங்கள் தேர்தலை சந்திக்க அஞ்சுகிறோம் என்பது சுத்தப் பிதற்றல். எப்போது தேர்தல் நடந்தாலும் அதைச் சந்திக்க தயாராகவே இருக்கிறோம். இந்தத் தேர்தல் ரத்துக்கும் அதிமுக-வுக்கும் என்ன சம்பந்தம் உள்ளது. தேர்தல் ஆணையத்துக்கும் எங்களுக்கும் எதாவது கூட்டு உள்ளதா?” என்று கடுகடுத்தவர்,
தொடர்ந்து, “தினகரன் போன்ற ஆட்கள் சுயேட்சைக் கட்சி நடத்தி வருகிறார்கள். அவர், ரோட்டில் போகும் யாரை வேண்டுமானாலும் வேட்பாளராக நிறுத்தலாம். ஆனால் எங்கள் கட்சி சார்பில் 52 பேர் விருப்ப மனுத் தாக்கல் செய்துள்ளனர். அவர்கள் குறித்து முறையாக பரிசீலிக்காமல் எந்த முடிவும் எடுக்க முடியாது. அதனால்தான் வேட்பாளர் அறிவிப்பதில் கால தாமதம் ஆனது. இன்னும் சொல்லப் போனால் எந்தெந்த அமைச்சர்கள் திருவாரூரில் தேர்தல் பணி பார்க்க வேண்டும் என்பதுவரை நாங்கள் முடிவெடுத்து வைத்திருந்தோம். அதனால், எங்களுக்கு எப்போது தேர்தலை சந்திக்கவும் பயமில்லை” என்று தீர்க்கமாக சொல்லி முடித்தார்.
இப்போது தேர்தல் நடந்தால் அது தங்களுக்கு சிக்கிலில்தான் போய் முடியுமென்று அனைத்துக் கட்சிகளும் நினைப்பதே அவர்கள் சொல்லும் கருத்துகள் மூலம் தெரிகிறது. எப்படியானாலும் அடுத்த சில மாதங்களில் தேர்தல் நடக்கத்தான் போகிறது. அப்போது மக்கள் மன்றம், சட்டமன்றத்தின் முடிவை தீர்மானிக்கும்.