டிட்லி புயல், வரும் வியாழக் கிழமை ஒடிசா மற்றும் வடக்கு ஆந்திராவில் கரையைக் கடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது
Bhubaneswar: வங்கக் கடலில் உருவாகிய டிட்லி புயல் ஒடிசா மற்றும் ஆந்திர பிரதேச கடலோரம் நகர்ந்து வருகிறது. இதனால் ஒடிசா மாநிலத்தில் மிக கனமழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ஒடிசா அரசாங்கள் ‘ஹை - அலெர்ட்டில்’ இருக்கிறது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 4 மாவட்டங்களில் இருக்கும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் அம்மாநில அரசு விடுமுறை அளித்துள்ளது.
ஒடிசா மாநில தலைமைச் செயலாளர் ஆதித்யா பிரசாத் பதி, தலைமையில் நடந்த கூட்டத்தில், கஜபதி, கஞ்சம், புரி மற்றும் ஜகத்சிங்பூர் ஆகிய மாவட்டங்களில் இருக்கும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று மற்றும் நாளை விடுமுறை அளிக்கலாம் என்று முடிவெடுக்கப்பட்டது. இன்று புயலின் தீவிரத் தன்மையைப் பார்த்து மற்ற மாவட்டங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளில் விடுமுறை அளிப்பது குறித்து அரசு முடிவெடுக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
ஒடிசாவின் கோபால்பூரிலிருந்து 510 கிலோ மீட்டர் தொலைவில், டிட்லி புயல் நிலை கொண்டுள்ளது. அது வரும் வியாழக் கிழமை ஒடிசா மற்றும் வடக்கு ஆந்திராவில் கரையைக் கடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
புயல், மிகத் தீவிர மழையைக் கொண்டு வரும் என்று எதிர்பார்க்கப்படுவதால், ஒடிசா அரசு, மாநிலத்தில் இருக்கும் அனைத்து மாவட்ட நிர்வாகங்களையும் உஷார் நிலையில் இருக்குமாறு எச்சரித்துள்ளது. புயலால் உயிர்ச் சேதம் ஏற்படக் கூடாது என்றும், தாழ்வான பகுதியில் இருப்பவர்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட வேண்டும் என்றும் மாவட்ட நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மீனவர்கள், கடலுக்குச் செல்ல வேண்டாம் என்றும் ஒடிசா அரசு கேட்டுக் கொண்டுள்ளது.