மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் இல்லத்தை அரசுடைமை ஆக்குவதற்கான சட்டமுன்வடிவு இன்று சட்டசபையில் தாக்கல் செய்யப்படுகிறது.
தமிழக சட்டசபை கூட்டத்தின் இறுதி நாளான இன்று கிட்டத்தட்ட 10 மசோதாக்கள் தாக்கல் செய்யப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது. காலை 10 மணிக்கு கூட்டத்தொடர் தொடங்கியதும், நடப்பு நிதியாண்டின் கூடுதல் செலவிற்கான துணை பட்ஜெட்டை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் இன்று தாக்கல் செய்கிறார்.
பின்னர், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை நினைவிடமாக்குவதற்கான சட்டமுன்வடிவை இன்று சட்டப்பேரவையில் செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தாக்கல் செய்கிறார்.
மேலும், அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாகப் பிரிப்பது, மத்திய அரசின் புதிய கல்வி கொள்கையில் தமிழக அரசின் நிலைப்பாடு, விவசாயிகளுக்கான கிசான் திட்டத்தில் நடைபெற்ற மோசடிக்கு எதிராக கவன ஈர்ப்பு தீர்மானம் உள்ளிட்டவை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.