This Article is From Sep 13, 2018

தமிழகத்தில் இ- சிகரெட்டுகளுக்கு தடை விதிப்பு

தமிழக அரசு பிறப்பித்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வந்துள்ளது

தமிழகத்தில் இ- சிகரெட்டுகளுக்கு தடை விதிப்பு

இ- சிகரெட்டை பயன்படுத்துவதால் பல்வேறு பாதிப்புகள் வரும் என்று கூறி அதற்கு தடை விதித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்ட அரசின் உத்தரவில், எலக்ட்ரானிக் நிகோட்டின் டெலிவரி சிஸ்டம்ஸ் (இ.என்.டி.எஸ்.) எனப்படும் இ-சிகரெட்டின் உற்பத்தி, விற்பனை ( ஆன்லைன் விற்பனை உள்பட) ஆகியவற்றை தமிழக அரசு தடை செய்கிறது. இ-சிகரெட்டை மாற்று பெயரிலும் அல்லது மாற்று மூலப்பொருட்களை கலந்து விற்பனை செய்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இ- சிகரெட்டை பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகளை பட்டியலிட்டுள்ள தமிழக அரசு சாதாரண பீடி சிகரெட்டுகளை விட இ-சிகரெட் குறைவான பாதிப்பையே ஏற்படுத்தும் என்ற தகவலை மறுத்துள்ளது.

மாநில சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் கடந்த ஜூன் 14-ந்தேதி இ-சிகரெட்டுகளுக்கு தடை விதிக்கப்படும் என்று அறிவித்திருந்தார். அதன் அடிப்படையில் தற்போது அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இ-சிகரெட்டின் உற்பத்தி, வர்த்தகம், அதனை காட்சிக்கு வைத்தல், மார்க்கெட்டிங், விளம்பரம், பயன்பாடு, இறக்குமதி, இருப்பு வைத்தல் உள்ளிட்ட அனைத்திற்கும் தமிழக அரசின் தடை பொருந்தும். 



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
.