This Article is From Feb 14, 2020

“10வது பட்ஜெட் யாருக்கும் பத்தாத பட்ஜெட்!”- ஓபிஎஸ்-ஐ கேலி செய்த மு.க.ஸ்டாலின்

ஒவ்வொரு மாநில குடிமகனின் தலையிலும் 57 ஆயிரம் ரூபாய் கடன் சுமை சுமத்தப்படுகிறது.

“10வது பட்ஜெட் யாருக்கும் பத்தாத பட்ஜெட்!”- ஓபிஎஸ்-ஐ கேலி செய்த மு.க.ஸ்டாலின்

தமிழக அரசின் 2020 - 2021 நிதி ஆண்டிற்கான பட்ஜெட்டை தமிழக சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்தார் துணை முதல்வரும் நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம். அது குறித்தான தனது கருத்தைத் தெரிவித்துள்ளார் தமிழக சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவரான மு.க.ஸ்டாலின்.

சட்டசபை வளாகத்துக்கு வெளியே செய்தியாளர்களை சந்தித்த ஸ்டாலின், “196 நிமிடம் நிதிநிலை அறிக்கையைப் படித்திருக்கிறார் ஓபிஎஸ். 159 நிமிடங்கள் மத்திய பட்ஜெட்டை வாசித்தார் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன். இது எப்படி அதிமுக அரசு, மத்திய அரசைப் பின்பற்றுகிறது என்பதற்கான உதாரணம். 

இது ஓபிஎஸ்ஸுக்கு 10வது பட்ஜெட் என்று சொல்லப்படுகிறது. ஆனால் உண்மையில் இது யாருக்கும் பத்தாத பட்ஜெட், எவருக்கும் பத்தாத பட்ஜெட். இது இந்த ஆட்சியின் கடைசி நிதிநிலை அறிக்கை. 

இந்த பட்ஜெட்டில் 4 லட்சம் கோடி ரூபாய் கடன் சுமை இருப்பதாக சொல்லப்பட்டிருக்கிறது. அதன்படி பார்த்தால், ஒவ்வொரு மாநில குடிமகனின் தலையிலும் 57 ஆயிரம் ரூபாய் கடன் சுமை சுமத்தப்படுகிறது.

கடனிலும், மோசடியிலும், லஞ்சம் வாங்குவதிலும், ஊழல் செய்வதிலும் மூழ்கியுள்ளது இந்த அரசு. இந்த நிதிநிலை அறிக்கையில் வளர்ச்சித் திட்டங்களும் இல்லை, தொலைநோக்கும் இல்லை.

நிதிநிலை அறிக்கையில் முதல்வருக்கு உரிய துறை, அமைச்சர்கள் தங்கமணி மற்றும் வேலுமணி துறைகளுக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான காரணம் என்ன? மக்கள் அறிவார்கள்,” என்று விமர்சனங்களை முன்வைத்தார்.

.