தமிழகத்தில் ரூ. 20 ஆயிரம் கோடி முதலீட்டில் 11 தொழிற்சாலைகளை தொடங்குவதற்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தொழில் வளர்ச்சியை அதிகரிக்கவும், இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்கும் நோக்கத்துடனும் உலக முதலீட்டாளர்கள் மாநாடு வரும் 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் சென்னையில் நடைபெறுகிறது.
இது தொடர்பாக விவாதிக்க தமிழக அமைச்சரவை கூட்டம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்றது. இதில் துணை முதல்வர் ஓ.பி.எஸ்., தமிழக அமைச்சர்கள், தலைமை செயலர் கிரிஜா வைத்தியநாதன், துறை செயலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதில் ரூ. 20 ஆயிரம் கோடி முதலீட்டில் 11 புதிய தொழில் நிறுவனங்களை தொடங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 2015-ல் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் ரூ.2 லட்சத்து 42 ஆயிரம் கோடி அளவுக்கு முதலீடுகள் ஈர்க்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
தற்போது நடைபெற உள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் 5 ஆயிரம் தொழில் நிறுவனங்களில் இருந்து பிரதிநிதிகள் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இதில் ரூ. 3 லட்சம் கோடி அளவுக்கு முதலீடுகளை ஈர்க்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.