This Article is From Nov 07, 2018

தமிழகத்தில் தடையை மீறி பட்டாசு வெடித்தவர்கள் மீது வழக்கு: போலீஸ் அதிரடி!

தமிழக அளவில் எத்தனை பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது என்பது இன்னும் தெரியவில்லை. 

தமிழகத்தில் தடையை மீறி பட்டாசு வெடித்தவர்கள் மீது வழக்கு: போலீஸ் அதிரடி!

தமிழகத்தில் நேற்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது. எந்த ஆண்டும் இல்லாத வகையில், பட்டாசு வெடிப்பதற்கு இந்த முறை கட்டுப்பாடு விதித்திருந்தது உச்ச நீதிமன்றம். பட்டாசு வெடிப்பது குறித்து நீதிமன்றம், ‘தீபாவளி பண்டிகையை ஒவ்வொரு மாநிலமும் வெவ்வேறு வகையில் கொண்டாடி வருகின்றன. எனவே, தமிழக அரசு எந்த 2 மணி நேரத்தில் பட்டாசு வெடிக்க வேண்டும் என்பதை முடிவெடுத்துக் கொள்ளலாம்' என்று தீர்ப்பு வழங்கியது.

பட்டாசு வெடிப்பதால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்பு, மக்கள் ஆரோக்கியத்துக்கு ஏற்படும் பாதிப்பு ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு, அதன் உற்பத்தி மற்றும் விற்பனையைத் தடை செய்ய வேண்டும் என்று கோரி தொடுக்கப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் சில வாரங்களுக்கு முன்னர் தீர்ப்பளித்தது.

தீர்ப்பில் நீதிமன்றம், ‘தீபாவளியன்று இரவு 8 மணி முதல் 10 மணி வரை மட்டும் தான், பட்டாசு வெடிக்க வேண்டும். அதேபோல கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டின் போது இரவு 11:55 மணி முதல் 12:30 வரை பட்டாசு வெடிக்கலாம். குறைந்த அளவு சத்தம் வரும் பட்டாசுகள் மட்டுமே வெடிக்கப்பட அனுமதி வழங்கப்படுகிறது. அதுவும் உரிமம் வாங்கியுள்ள விற்பனையாளர்கள் மூலம் மட்டுமே விற்கப்பட வேண்டும்' என்று கூறியது. 

இதற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்து மனு தாக்கல் செய்தது. அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், ‘2 மணி நேரம் தான் பட்டாசு வெடிக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றமில்லை. அது எந்த 2 மணி நேரம் என்பதை தமிழக அரசு முடிவு செய்து கொள்ளலாம்' என்று தெரிவித்தது. 

இதைத் தொடர்ந்து தமிழக அரசு, ‘தீபாவளியன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையும் பட்டாசு வெடிக்கலாம்' என்று கூறியது. மேலும், இந்த நேரத்தைத் தாண்டி உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை அவமதிக்கும் வகையில் நடந்து கொண்டால் வழக்கு தொடுக்கப்படும் என்றும் தமிழக அரசு எச்சரித்தது. 

தடையையும் மீறி தமிழகத்தில் பரவலாக பட்டாசு வெடிக்கப்பட்டது. இதையடுத்து கோவை, திருப்பூர், திருநெல்வேலி, விழுப்புரம் ஆகிய இடங்களில் தடையை மீறி பட்டாசு வெடித்தவர்கள் மீது போலீஸ் வழக்கு பதிவு செய்தது. தமிழக அளவில் எத்தனை பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது என்பது இன்னும் தெரியவில்லை. 



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
.