This Article is From Sep 29, 2019

“வெள்ளை அறிக்கை கேக்குறாரு…”- மு.க.ஸ்டாலினை விளாசிய முதல்வர் Edappadi Palainsamy!

முன்னதாக முதல்வர் Edappadi Palainsamy, வெளிநாடுகளுக்குச் சென்று அங்கிருக்கும் பெரு நிறுவன உரிமையாளர்களை சந்தித்து, தமிழகத்தில் முதலீடு செய்ய வருமாறு அழைப்பு விடுத்தார்

“வெள்ளை அறிக்கை கேக்குறாரு…”- மு.க.ஸ்டாலினை விளாசிய முதல்வர் Edappadi Palainsamy!

“முதல்வர் பழனிசாமி மூலம் தமிழகத்துக்கு முதலீடு வந்தால் நல்லதுதான். அவர் சொன்ன அனைத்து முதலீடுகளும் தமிழக்கத்துக்கு வந்தது என்றால் நானே அவருக்கு விழா எடுப்பேன்"- MK Stalin

சேலத்தில் நடந்த பொதுக் கூட்ட நிகழ்ச்சியில் பேசிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி (Edappadi Palanisamy), திமுக தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலினை (MK Stalin) கடுமையாக விமர்சித்துப் பேசியுள்ளார். 

சேலம் மாவட்டம் மேட்டூரில் நடந்தக் கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, “சட்டமன்றத் தேர்தலின் போது, மக்கள் அனைவருக்கும் தடையில்லா மின்சாரம் வழங்கப்படும் என்று நாங்கள் வாக்குறுதி அளித்தோம். 3 ஆண்டுகளில் அம்மாவின் ஆட்சியில் அது செய்து காட்டப்பட்டது. திமுக ஆட்சியில் இருந்த மின்வெட்டுப் பிரச்னையை தீர்த்து வைத்தது அதிமுக ஆட்சிதான்.

தமிழகத்தில் தடையில்லா மின்சாரம் வழங்கப்படுவதால்தான், இங்கு தொடர்ந்து தொழில் தொடங்க முதலீட்டாளர்கள் வந்த வண்ணம் உள்ளனர். வெளிநாட்டுக்கு நான் சென்றபோது கூட, என்னைப் பார்த்த அனைத்துத் தொழிற்சாலை உரிமையாளர்களும், தமிழகம் எப்படி வளம் கொழிக்கும் மாநிலமாக விளங்குகிறது என்பதை சிலாகித்துச் சொன்னார்கள். அந்த காரணத்தினால்தான் 41 நிறுவனங்களுடன் என்னால் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டது. 

இதைக் கூடப் பொறுத்துக்கொள்ள முடியாத மு.க.ஸ்டாலின் வெள்ளை அறிக்கைக் கேட்கிறார். தமிழகத்தில் இன்னும் பல தொழிற்சாலைகள் திறக்கப்பட இருக்கின்றன. படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதுதான் எங்களின் லட்சம். ஒரு பக்கம் இப்படியென்றால், விவசாயிகளைக் காக்க நீர்மேலாண்மைத் திட்டங்கள், விவசாயத்துக்குத் தேவையான கடனுதவியை அளிக்க வேண்டும் என்பதற்காக பாடுபட்டுக் கொண்டிருக்கிறோம். தமிழகத்தில் பொருளாதாரத்தை உயர்த்த வேண்டும் என்ற உன்னத நோக்கத்தோடு நாங்கள் பணியாற்றிக் கொண்டிருக்கிறோம். இது மக்களுடைய அரசு. மக்களின் தேவைகளைப் புரிந்து கொண்டு செயலாற்றக் கூடிய அரசு” என்று பேசினார். 

முன்னதாக முதல்வர் பழனிசாமி, அமெரிக்கா, பிரிட்டன், துபாய் உள்ளிட்ட நாடுகளுக்குச் சென்று அங்கிருக்கும் பெரு நிறுவன உரிமையாளர்களை சந்தித்து, தமிழகத்தில் முதலீடு செய்ய வருமாறு அழைப்பு விடுத்தார். இந்தப் பயணத்தினால், பல்லாயிரம் கோடி ரூபாய் முதலீடு தமிழகத்துக்கு வரும் என்று அதிமுக சார்பில் தெரிவிக்கப்படுகிறது.

இதற்குத்தான் மு.க.ஸ்டாலின், “முதல்வர் பழனிசாமி மூலம் தமிழகத்துக்கு முதலீடு வந்தால் நல்லதுதான். அவர் சொன்ன அனைத்து முதலீடுகளும் தமிழக்கத்துக்கு வந்தது என்றால் நானே அவருக்கு விழா எடுப்பேன். முதலீடுகள் வருவது குறித்தான வெள்ளை அறிக்கையை அவர் வெளியிடத் தயாரா?” என்று கேள்வியெழுப்பினார். 

.