கஜா புயலால் தமிழகத்தில் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு பிரதமர் நரேந்திர மோடியை இன்று நேரில் சந்தித்து நிவாரணம் கேட்டார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி. இதையடுத்து அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர், ‘கஜா புயல் காரணமாக இதுவரை 12 மாவட்டங்களில் 63 பேர் உயிரிழந்துள்ளனர். கஜா புயலால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 10 லட்ச ரூபாய் நிவாரணம் அளிக்கப்படும். கஜா புயலால் 12 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டன.
கஜா புயல் பாதித்த பகுதிகளை ஆய்வு செய்ய விரைவில் மத்திய குழுவை தமிழகத்திற்கு அனுப்பி வைக்குமாறு பிரதமிரடத்தில் கோரினேன். அதற்கு உடனடியாக அது குறித்து நடவடிக்கை எடுப்பதாக பிரதமர் மோடி கூறினார். மேலும், கஜா புயல் நிவாரண நிதியாக 15 ஆயிரம் கோடி ரூபாய் தமிழகத்துக்கு வழங்க பிரதமரிடம் கோரினேன். புயல் சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள உடனடியாக 1,500 கோடி ரூபாய் பிரதமரிடத்தில் கோரப்பட்டுள்ளது.
147 துணை மின் நிலையங்கள் இதுவரை சீரமைக்கப்பட்டுள்ளன. முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக பெருமளவிலான சேதங்கள் தவிர்க்கப்பட்டன. 11.53 லட்சத்துக்கும் அதிகமான மரங்கள் சேதமடைந்துள்ளன. மரங்களை அப்புறப்படுத்துதல் மற்றும் மின்சார சீரமைப்புப் பணிகள் போர்க்கால அடிப்படையில் நடந்து வருகிறது' என்று கூறினார்.