கஜா புயலால் தமிழகத்தில் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு பிரதமர் நரேந்திர மோடியை இன்று நேரில் சந்தித்து நிவாரணம் கேட்டார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி. இதையடுத்து நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில், திமுக தலைவரும் தமிழக எதிர்கட்சியின் தலைவருமான மு.க.ஸ்டாலினை வறுத்தெடுத்தார்.
முதல்வர் பழனிசாமி, ‘கஜா புயலால் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு அதிமுக அரசு 10 லட்ச ரூபாய் நிவாரண நிதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், திமுக ஆட்சியில் இருந்த போது, புயல் மற்றும் மழை காரணமாக இறந்தவர்களுக்கு 2 லட்ச ரூபாய் தான் நிவாரணம் அளிக்கப்பட்டது.
ஒப்பிட்டு சொல்வதற்காக இதைச் சொல்லவில்லை. எதிர்கட்சிகள், தமிழக அரசு அளிக்கும் நிவாரண நிதி குறைவு என்றும், அரசின் நடவடிக்கை போதாது என்றும் தொடர்ந்து விமர்சித்து வருகின்றன. அதற்கு பதிலடி கொடுக்கும் வகையிலும், ஊடகங்களின் வாயிலாக இந்த விஷயங்களெல்லாம் சென்று சேர வேண்டும் என்ற நோக்கிலும் தான் இதைச் சொல்கிறேன்.
மேலும் மக்களின் துயரங்களை இந்த அரசும் நானும் அறிந்திருக்கவில்லை என்கிறார்கள். 9 முறை ஒரே தொகுதியில் நின்றவன் நான். ஒரே தொகுதியில் நின்று மக்களின் ஆதரவைப் பெற்று வெற்றி பெற்றவன் நான். மக்கள் குறித்து எனக்குத் தெரியும். மக்களின் கஷ்டங்கள் எனக்குப் புரியும்.
நான் விமானம் மூலம் சென்றாலும், தாழ்வாக பறந்து புயல் பாதித்த இடங்களை உன்னிப்பாக பார்வையிட்டேன். புயலின் சேதங்கள் அதிகமாக இருந்ததால் சாலை மார்க்கமாக அனைத்து இடங்களுக்கும் செல்ல முடியாது நிலை இருந்தது. ஆகவே தான் ஆகாயமார்க்கமாக சென்றேன். அதில் வேறு எந்த நோக்கமும் இல்லை.
ஸ்டாலின் சாலை மார்க்கமாக 3 இடங்களுக்கு மட்டுமே சென்றுள்ளார். வேறு எந்த இடங்களுக்கும் அவரால் செல்லக் கூடிய சூழல் இல்லை. அவருடைய வேலை, பார்ப்பதுடன் முடிந்துவிடுகிறது. ஆனால் அரசின் வேலை அதோடு முடியாது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு கொடுக்க வேண்டும், மரங்களை அகற்ற வேண்டும், மின்சார சீரமைப்பு செய்ய வேண்டும், மீட்பு நடவடிக்கையை துரிதப்படுத்த வேண்டும். கடந்த காலங்களை விட மீட்பு நடவடிக்கை மிகவும் வேகமாக நடைபெறுகிறது. எனவே, அர்த்தமில்லாத விமர்சனங்களை எதிர்கட்சிகள் தவிர்க்க வேண்டும்' என்று கூறினார்.