"“உள்ளாட்சித் தேர்தலுக்கு சிலர் முட்டுக்கட்டை போடுகின்றனர். ஆனால் நிச்சயம் உள்ளாட்சித் தேர்தல் நடக்கும்"
திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து தென்காசியைப் பிரித்து தனி மாவட்டமாக சில நாட்களுக்கு முன்னர் அறிவித்தது தமிழக அரசு. இன்று தென்காசி மாவட்டத்தின் துவக்க விழா நடைபெற்றது. அதில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், தமிழக அமைச்சர்கள், அதிமுக முக்கிய நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் சிறப்புரை ஆற்றிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, “மத்திய அரசுடன் இணக்கமாக இருப்பதால் 5 மாதத்தில் 6 மருத்துவக் கல்லூரிகள் தமிழகத்திற்கு கிடைத்துள்ளது. கிருஷ்ணகிரி, நாகை, திருவள்ளூர் மாவட்டங்களில் மருத்துவக்கல்லூரி அமைக்கும் திட்டம் மத்திய அரசின் பரிசீலனையில் உள்ளது.
தமிழகத்திற்கு பயன் தரும் மத்திய அரசு திட்டங்களை ஆதரிப்போம். மக்களை பாதிக்கக்கூடிய திட்டங்களை கடுமையாக எதிர்ப்போம்,” என்று பேசினார்.
தொடர்ந்து உள்ளாட்சித் தேர்தல் பற்றி பேசிய அவர், “உள்ளாட்சித் தேர்தலுக்கு சிலர் முட்டுக்கட்டை போடுகின்றனர். ஆனால் நிச்சயம் உள்ளாட்சித் தேர்தல் நடக்கும். உள்ளாட்சித் தேர்தலுக்கும் புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
மக்களின் கோரிக்கையின்படியே திருநெல்வேலியிலிருந்து பிரித்து தென்காசி மாவட்டம் உருவாக்கப்பட்டுள்ளது,” என்றார்.