கஜா புயலால் பாதிப்படைந்த மக்களுக்கு ரயில்கள் மூலம் பல நிவாரணப் பொருட்கள் வருகின்றன. இந்த நிவாரணப் பொருட்கள் வருவதை எளிமையாக்கும் விதத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயலுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில் முதல்வர், 'தமிழகத்தின் 12 மாவட்டங்களில் ‘கஜா' புயல் கோரத் தாண்டவம் ஆடியதைப் பற்றி உங்களுக்குத் தெரிந்திருக்கும். இந்தப் புயலால் 4 கடலோர மாவட்டங்கள் மிகவும் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளன. இதனால், 60-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மக்கள் அவர்களின் வீடுகள், கால்நடைகள், விளை நிலங்கள் போன்றவற்றை இழந்து வாடி வருகின்றனர்.
புயலால் பாதித்த மக்களின் நிலைமையைப் பார்த்து, நாட்டின் பல்வேறு இடங்களில் இருப்பவர்களும் நிவாரணப் பொருட்களை அனுப்பி வருகின்றனர்.
இப்படி ரயில்கள் மூலம் வரும் நிவாரணப் பொருட்களுக்கான கட்டணத்தை ரயில்வே துறை ரத்து செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
கேரளாவில் சமீபத்தில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கின் போது, இதைப் போன்றொரு நடவடிக்கை எடுக்கப்பட்டதை நினைவு கூறுகிறேன். இது குறித்து விரைந்து நடவடிக்கை எடுத்தால் உதவியாக இருக்கும்' என்று குறிப்பிட்டுள்ளார்.