This Article is From Nov 11, 2018

‘மக்கள் எதிர்ப்பினால்தான் ’சர்கார்’ காட்சிகள் நீக்கப்பட்டன!’- முதல்வர் புதிய விளக்கம்

அதிமுக-வினரின் தொடர் போராட்டம் உள்ளிட்ட நெருக்கடிகளை தொடர்ந்து, சர்கார் திரைப்படத்தில் வரும் அந்த சர்ச்சை காட்சிகள் மட்டும் நீக்கம் செய்யப்பட்டுள்ளது

Advertisement
தெற்கு Posted by

நடிகர் விஜய் நடிப்பில் வெளியான அரசியல் த்ரில்லர் படமான 'சர்கார்' திரைப்படத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசை விமர்சிக்கும் வகையில் இருப்பதாகவும், பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ள இலவசத் திட்டங்களை கடுமையாக விமர்சிக்கும் வகையில் இருப்பதாகவும், ஜெயலலிதாவின் இயர்பெயர் என கூறப்படும் கோமளவல்லி பெயர் படத்தில் வில்லியாக வரும் வரலட்சுமி சரத்குமாருக்கு சூட்டப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதனால், கோவை, மதுரை, சென்னை என தமிழகம் முழுவதும் பல மாவட்டங்களில் அதிமுக தொண்டர்கள் சர்கார் திரைப்படம் திரையிடப்படும் திரையரங்குகளில் முன்பிருந்த சுவரொட்டிகளையும் பேனர்களையும் கிழித்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர். சர்ச்சைக்குரிய அந்தக் காட்சிகளை படத்திலிருந்து நீக்க வேண்டும் என்றும் அதுவரை போராட்டம் தொடரும் என்றும் அவர்கள் தெரிவித்திருந்தனர்.

அதிமுக-வினரின் தொடர் போராட்டம் உள்ளிட்ட நெருக்கடிகளை தொடர்ந்து, சர்கார் திரைப்படத்தில் வரும் அந்த சர்ச்சை காட்சிகள் மட்டும் நீக்கம் செய்யப்பட்டுள்ளது.

Advertisement

சர்கார் விவகாரம் தமிழக அளவில் விசுவரூபம் எடுத்த நிலையில் நேற்று கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ‘அதிமுக-வினர் தான் ‘சர்கார்' திரைப்பட பேனர்கள் கிழித்தனர் என்று கூற முடியாது. ஒரு கட்சி கொண்டு வந்தத் திட்டங்களை அவமானப்படுத்தினால், அந்தக் கட்சியில் இருப்பவர்களும் அதனால் பயனடைந்தவர்களும் கொதித்தெழுவார்கள். பொது மக்கள் தான் சர்கார் திரைப்படத்தில் இருந்த சர்ச்சைக்குரிய காட்சிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அதனாலேயே அவை நீக்கப்பட்டன' என்று விளக்கம் அளித்துள்ளார்.

Advertisement