This Article is From Oct 05, 2018

சபாநாயகருக்கு எதிராக தீர்மானம் - கருணாஸுக்கு என்ன ஆகும்?- முதல்வர் பதில்

ஒரு தலைப்பட்சமாக செயல்படும் சபாநாயகர் தனபாலை பதவியில் இருந்து நீக்க வலியுறுத்தி சட்டப்பேரவைச் செயலாளருக்கு கருணாஸ் எம்.எல்.ஏ புகார் மனு அளித்துள்ளார்

சபாநாயகருக்கு எதிராக தீர்மானம் - கருணாஸுக்கு என்ன ஆகும்?- முதல்வர் பதில்

நடிகராக இருந்து அரசியல்வாதியாக மாறியவர் கருணாஸ்

Madurai:

ஒரு தலைப்பட்சமாக செயல்படும் சபாநாயகர் தனபாலை பதவியில் இருந்து நீக்க வலியுறுத்தி சட்டப்பேரவைச் செயலாளருக்கு கருணாஸ் எம்.எல்.ஏ புகார் மனு அளித்துள்ளார். இந்நிலையில், கருணாஸ் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்பது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதிலளித்துள்ளார். 

முக்குலத்தோர் புலிப்படை தலைவரும், திருவாடானை தொகுதி அதிமுக எம்.எல்.ஏவுமான கருணாஸ், அண்மையில் சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் போலீஸ் அதிகாரிகளை, அவதூறாக பேசியதாக கருணாஸ் கைது செய்யப்பட்டு, தற்போது பிணையில் வெளி வந்துள்ளார்.

இதைத்தொடர்ந்து, வெளியில் வந்த கருணாஸை பழைய வழக்கு ஒன்றை காரணம் காட்டி மீண்டும் கைது செய்ய நெல்லை போலீசார் சென்னையில் உள்ள கருணாஸ் வீட்டிற்கு சென்றனர். ஆனால் அப்போது அவர் வீட்டில் இல்லை. தொடர்ந்து கருணாஸ் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

கருணாஸ் அதிமுக-வின் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு எம்.எல்.ஏ. ஆக தேர்வு செய்யப்பட்டவர். இந்நிலையில், கருணாஸ் மீது நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் தரப்பு முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக ஆலோசனையும் நடத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் கருணாஸ் சட்டப்பேரவை செயலாளருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் சபாநாயகர் தனபால் அரசியல் அமைப்பு படியும், சட்ட விதிகளின் படியும் நடக்காமல் ஒரு தலைப்பட்சமாக நடக்கிறார். எனவே சபாநாயகர் தனபாலை நீக்கக்கோரி அவர் குறிப்பிட்டுள்ளார்.
சட்டசபை விதிகளின்படி, சபாநாயகரை பதவி நீக்கம் செய்ய கோரும் தீர்மானத்தை கொண்டு வர, 33 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தேவை. தற்போது, கருணாஸ் கொடுத்துள்ள தீர்மானத்தை, சட்டசபையில் கொண்டு வரும்போது, அதை ஆதரிப்பது என தி.மு.க. முடிவெடுத்திருப்பதாக, தகவல் வெளியாகி உள்ளது.

கருணாஸ் திமுக நடத்திய மாதிரி சட்டசபை கூட்டத்தில் பங்கேற்றார். இதேபோல், உடல்நலக்குறைவுக் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கருணாஸை நேற்று திமுக எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன் நேரில் சென்று சந்திதார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் கருணாஸின் செயலுக்கு நடவடிக்கை எதாவது எடுக்கப்படுமா என்று செய்தியாளர்கள் சந்திப்பில் கேட்கப்பட்ட கேள்விக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ‘கருணாஸ், அதிமுக சின்னத்தில் நின்று வெற்றி பெற்றவர். அவர் சபாநாயகருக்கு எதிராக ஒரு நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டு வந்தால் என்ன நடவடிக்கை பாயும் என்பது உங்களுக்கே தெரியும். சட்டம் குறித்து பத்திரிகையாளர்களுக்கு நன்றாக தெரியுமே’ என்று சூசகமாக பதிலளித்துள்ளர். 
 

.