தமிழகத்தின் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழா, சென்ற ஆண்டு தமிழக அரசால் கொண்டாடப்பட்டது. இதையொட்டி, இன்று சென்னை காமராஜர் சாலையில் இருக்கும் பொதுப் பணித்துறை அலுவலகத்தின் அருகில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு வளைவிற்கு அடிக்கல் நாட்டும் விழா நடைபெற்றது. இதில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி சிறப்பு வளைவிற்கான அடிக்கல்லை நாட்டினார்.
இது குறித்து அரசு சார்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில், ‘எம்.ஜி.ஆர். அவர்களின் உயரிய லட்சியத்தினையும், சிறப்பினையும் நினைவுகூறும் வண்ணம் எம்ஜி.ஆர். நூற்றாண்டு விழாவினை, தமிழ்நாடு முழுவதும் மிகப்பிரம்மாண்டமாக தமிழ்நாடு அரசால் முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி அவர்களின் ஆணையின்படி கொண்டாடப்பட்டது.
இவ்விழாவானது, 30.6.2017 அன்று மதுரையில் தொடங்கப்பட்டு, 31.12.2017 அன்று திண்டுக்கல்லில் நிறைவு பெற்றது. இவ்விழாவில், முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள், மாவட்டந்தோறும் பல்வேறு புதிய திட்டப் பணிகளுக்கான அறிவிப்புகளை வெளியிட்டார்கள்.
எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு, சென்னையில் அவரின் நினைவாக நூற்றாண்டு விழா வளைவு அமைக்கப்படும் என்று முதலமைச்சர் கடந்த 28.6.2017 அன்று சட்டப்பேரவையில் அறிவித்தார்கள்.
அந்த அறிவிப்பிற்கிணங்க, 23.8.2018 அன்று காலை 10.45 மணிக்கு சென்னை, காமராஜர் சாலையில் உள்ள பொதுப்பணித்துறை அலுவலகத்தின் அருகில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு வளைவிற்கு அடிக்கல் நாட்டும் விழா நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி எம்.ஜி.ஆர். நூற்றாண்டு வளைவு அமைக்க அடிக்கல் நாட்டினார்கள்.
இந்த வளைவு அழகிய கலைநயத்துடன் கூடிய சிற்ப வேலைப்பாடுகளுடன் சுமார் 66 அடி அகலமும் 52 அடி உயரமும் கொண்டதாக அமைக்கபடவுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.