This Article is From Jun 27, 2019

“நீர் பற்றாக்குறைக்கு முழு காரணம் மழை பொய்த்ததுதான்!”- மீண்டும் அடித்துச் சொல்லிய எடப்பாடியார்

"தற்போதைய நீர் பற்றாக்குறைக்கு முழு காரணம் மழைதான். மழை பெய்திருந்தால் ஏரி, குளங்கள் நிரம்பியிருக்கும்"

Advertisement
தமிழ்நாடு Written by

"மழை நீரை சேகரிக்கும் திட்டத்தை அமல் செய்ய தொடர் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மக்களுக்கும் அது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்"

காஞ்சிபுரத்தில் உள்ள நெம்மேலியில், கடல் நீரை குடிநீராக்கும் 2வது ஆலைக்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட தமிழக முதலவர் எடப்பாடி பழனிசாமி, அடிக்கல் நாட்டி, திட்டத்தைத் துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியின் போது தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் உடனிருந்தனர். அடிக்கல் நாட்டு விழாவை அடுத்து செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, “இந்த முறை தமிழகத்தில் நிலவும் நீர் பற்றாக்குறைக்கு முழுக்க முழுக்க காரணம், பருவமழை பொய்த்ததுதான்” என்று கூறியுள்ளார். 

அவர் மேலும் பேசுகையில், “தற்போதைக்கு நெம்மேலியில் இருக்கும் கடல் நீரை குடிநீராக்கும் ஆலை மூலம், 210 மில்லியன் லிட்டர் குடிநீர் உற்பத்தி செய்யப்பட்டு, பொது மக்கள் பயன்பாட்டுக்காக கொடுக்கப்பட்டு வருகிறது. இன்று அடிக்கல் நாட்டியுள்ள ஆலை மூலம், 150 மில்லியன் லிட்டர் குடிநீர் கூடுதலாக உற்பத்தி செய்யப்படும். 2021 ஆம் ஆண்டில், இந்தத் திட்டப் பணி முடிந்து, மக்களுக்குக் குடிநீர் வழங்கப்படும். சென்னைக்கு என்றைக்கும் குடிநீர் பிரச்னை வராது. அதற்கான திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்படும். 

தற்போதைய நீர் பற்றாக்குறைக்கு முழு காரணம் மழைதான். மழை பெய்திருந்தால் ஏரி, குளங்கள் நிரம்பியிருக்கும். அதன் மூலம் நிலத்தடி நீர் செறிவூட்டப்பட்டிருக்கும். ஆனால், அப்படி நடக்கவில்லை. அதனால்தான் தற்போது வறட்சி நிலவிவருகிறது. 

Advertisement

மழை நீரை சேகரிக்கும் திட்டத்தை அமல் செய்ய தொடர் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மக்களுக்கும் அது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். கடல் நீரை, குடிநீராக்குவதால் ஒரு பாதிப்பும் கிடையாது. அது குறித்து அனைவரும் தொழில்நுட்ப வல்லுநர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம்.” என்று பேசினார்.
 

Advertisement