This Article is From Jul 29, 2019

“தேர்தல் ரத்தானதுக்கு யார் பொறுப்பு?”- வேலூரில் மல்லுக்கட்டிய எடப்பாடியார் - ஸ்டாலின்!

ஒருவர், மற்றவர் குறித்து மேடையில் பேசுவதும், அதற்கு மற்றவர் இன்னொரு மேடையில் பதிலடி கொடுப்பதும் வேலூர் தேர்தல் களத்தில் தொடர்கதையாகியுள்ளது. 

“தேர்தல் ரத்தானதுக்கு யார் பொறுப்பு?”- வேலூரில் மல்லுக்கட்டிய எடப்பாடியார் - ஸ்டாலின்!

திமுக சார்பில் அக்கட்சியின் பொருளாளர் துரை முருகனின் மகனான கதிர் ஆனந்த், வேலூரில் போட்டியிடுகிறார். அதிமுக சார்பில் புதிய நீதிக் கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம் போட்டியிடுகிறார்.

வேலூர் நாடாளுமன்றத் தொகுதிக்கு வரும் ஆகஸ்ட் 5 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தீவிரமாக பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஒருவர், மற்றவர் குறித்து மேடையில் பேசுவதும், அதற்கு மற்றவர் இன்னொரு மேடையில் பதிலடி கொடுப்பதும் வேலூர் தேர்தல் களத்தில் தொடர்கதையாகியுள்ளது. 

முன்னதாக மு.க.ஸ்டாலின், “வேலூர் நாடாளுமன்றத் தேர்தல் ரத்தானதற்குக் காரணமே அதிமுகதான். அவர்கள் கண்டிப்பாக வெற்றி பெற முடியாது என்று நினைத்து தேர்தலில் ரத்துக்கு வேலை செய்தனர்” என்று குற்றம் சாட்டினார். 

அதற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, “வேலூர் தேர்தல் மட்டும் ரத்தானதற்கு யார் காரணம் என்பது அனைவருக்கும் தெரியும். ஸ்டாலினுக்குத் தெரிந்த கட்சிக்காரர் வீட்டிலிருந்துதான் கட்டுக் கட்டாக பணத்தைப் பறிமுதல் செய்தது வருமான வரித் துறை. அதைத் தொடர்ந்துதான் நாட்டிலேயே வேலூரில் மட்டும் தேர்தல் ரத்தானது. உண்மை இப்படி இருக்கையில் ஸ்டாலின் அப்பட்டமாக பொய் சொல்லி வருகிறார்” என்று பதிலடி கொடுத்தார். 

அவர் மேலும், “திமுக ஒரு குடும்பக் கட்சி. ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மட்டும்தான் அந்தக் கட்சியின் உயர் மட்டப் பொறுப்புக்கு வர முடியும். முதலில் கட்சியின் தலைவராக கருணாநிதி இருந்தார். இப்போது அந்தப் பொறுப்புக்கு ஸ்டாலின் வந்துள்ளார். அடுத்து அவரது மகன் உதயநிதி வருவார். திமுக-வில் கட்சிக்காக உழைத்த தகுதியுள்ள வேறு நபர்களே கிடையாதா?

ஆனால் அதிமுக அப்படியில்லை. ஒரு சாதாரண விவசாயக் குடும்பத்தில் பிறந்த நான், இந்த கட்சியில் பொறுப்பைப் பெற்று முதல்வர் ஆக முடிகிறது. ஜனநாயகம் மிக்கக் கட்சி அதிமுக” என்றார். 

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஸ்டாலின், தான் பேசிய இன்னொரு பொதுக் கூட்டத்தில், “அதிமுக-வில் குடும்ப அரசியல் இல்லையா. ஓ.பி.எஸ்-ன் மகன் ஓ.பி.ரவீந்திரநாத், தேனி தொகுதியில் போட்டியிட்டார். அதேபோல அமைச்சர் ஜெயக்குமாரின் மகன் ஜெயவர்த்தன் தேர்தலில் போட்டியிட்டு வருகிறார். முன்னாள் அதிமுக மேயர் ராஜன் செல்லப்பாவின் மகன் ராஜன் சத்யா, தேர்தலில் போட்டியிருகிறார். இது குடும்ப அரசியல் இல்லையா” என்று சாடினார். 

திமுக சார்பில் அக்கட்சியின் பொருளாளர் துரை முருகனின் மகனான கதிர் ஆனந்த், வேலூரில் போட்டியிடுகிறார். அதிமுக சார்பில் புதிய நீதிக் கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம் போட்டியிடுகிறார். இந்த இருவருக்கும் இடையில்தான் போட்டி கடுமையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
.