கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் ஊழியர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நிர்வாக இயக்குனரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் புகார் அளித்துள்ளனர்.
கோவையில் தனியார் கல்லூரியின் நிர்வாக இயக்குனர் அங்கு பணிபுரியும் பெண் ஒருவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வீடியோ சமூகவலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து, நிர்வாக இயக்குனர் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கூறி கல்லூரி வளாகத்தில் இந்திய மாணவர் கூட்டமைப்பு சங்கத்தினருடன் இணைந்து கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவர்களின் தொடர் போராட்டத்தினால் கல்லூரிக்கு 3 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டது.
இதுதொடர்பாக கல்லூரியில் பணியாற்றிய பெண் ஊழியர் ஒருவர் இரண்டு நாட்கள் முன்னதாக காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஆனால் மீண்டும் அந்த புகாரை அவர் வாபஸ் பெற்றுவிட்டார் என போலீஸார் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, சமூகவலைதளங்களில் வெளியான வீடியோவை ஆதாரமாக வைத்து ஊழியர்களுக்கு பாலியல் தொல்லை அளித்த கல்லூரி நிர்வாக இயக்குனரை கைது செய்ய வேண்டும் என அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர், மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
இது தொடர்பாக மாதர் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் கூறும்போது, இதில் சம்பந்தப்பட்ட அந்த பெண் மிரட்டப்பட்டுள்ளார். இதனால் மனரீதியாக அவர் மிகுந்த பாதிப்படைந்துள்ளார். எனவே அவர் புகார் கொடுக்க அச்சமடைந்துள்ளார். எனவே நாங்கள் புகார் கொடுத்துள்ளோம் என்றனர்.
(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)