TN Local body elections: “ஊரக உள்ளாட்சித் தேர்தலானது 100 விழுக்காடு நேர்மையாகவும், சுதந்திரமாகவும் நடைபெற்றது"
TN Local body elections: தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடந்த மாதம் 27 மற்றும் 30-ம் தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. மாவட்ட ஊராட்சி மன்ற உறுப்பினர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், கிராம ஊராட்சி தலைவர், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் என மொத்தம் 91 ஆயிரத்து 975 பதவிகளுக்கு இந்த தேர்தல் நடைபெற்றது. மொத்தம் உள்ள 37 மாவட்டங்களில் 27 மாவட்டங்களுக்கு தேர்தல் நடந்தது.
நேற்று மாலை தேர்தல் முடிவுகள் அதிகாரப்பூரவமாக அறிவிக்கப்பட்டன. இதில் திமுக கூட்டணியே இதிக இடங்களில் வெற்றி பெற்றது. அதைத் தொடர்ந்து அதிமுக கூட்டணியும் கணிசமான இடங்களைப் பிடித்தது. அப்படி இருந்தும் திமுக கூட்டணியின் வெற்றியை மறைக்கும் வகையில் அதிமுக கூட்டணிக்குத் தேர்தல் ஆணையம் செயல்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலினே, தமிழக தேர்தல் ஆணையரான பழனிசாமியிடம் நேரடியாக சென்று 3 முறை புகார் அளித்தார்.
இந்த சர்ச்சைகளுக்கு மத்தியில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார் ஆணையர் பழனிசாமி. அப்போது நிருபர் ஒருவர், “பல இடங்களில் திமுக பெற்ற வெற்றியை அதிமுக பெற்றதாக தேர்தல் அதிகாரிகள் மாற்றி சொன்னதாக புகார்கள் எழுந்தன. முதல்வரின் சொந்த ஊரான சேலத்தில் நடந்த முறைகேடுகளுக்கு திமுக தரப்பு ஆதாரங்களை வெளியிட்டது. தர்மபுரியில், அந்த தொகுதி திமுக எம்பி, நடந்த முறைகேட்டை வெட்ட வெளிச்சமாக்கினார். அதற்கும் வீடியோ ஆதாரம் இருக்கிறது. இது குறித்து என்ன சொல்கிறீர்கள்?” என்று விரிவாக ஒரு நிருபர் கேள்வி எழுப்ப,
அதற்கு பழனிசாமி, “ஊரக உள்ளாட்சித் தேர்தலானது 100 விழுக்காடு நேர்மையாகவும், சுதந்திரமாகவும் நடைபெற்றது. இதில் எந்த முறைகேடுகளும் நடைபெறவில்லை என்பது அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் தெரியும் பொது மக்களுக்கும் தெரியும். எங்களிடம் அளிக்கப்பட்ட புகார்கள் குறித்து நாங்கள் உடனுக்குடன் நடவடிக்கை எடுத்தோம். தற்போது கொடுக்கப்பட்டிருக்கும் புகார்கள் குறித்து முறையாக விசாரணை நடத்தவிட்டுத்தான் விளக்கம் அளிக்க முடியும். ஆனால், தேர்தல் நேர்மையாக நடந்தது உறுதி,” என்று திட்டவட்டமாக கூறினார்.
ஆணையர் பழனிசாமி இப்படி விளக்கம் அளித்தாலும், தொடர்ச்சியாக திமுக தரப்பு, “மாநில அடிமை அரசான அதிமுகவின் கைப்பாவையாக செயல்படுகிறது மாநில தேர்தல் ஆணையம். அதையும் மீறிதான் நாம் மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ளோம்,” என்கிறது.