மத்திய அரசுக்கு வேண்டியவர்களாக இருந்தும் ஒன்றும் பெற முடியவில்லையே என தமிழக அரசு குறித்து அமமுக துணைபொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கடுமையாக தாக்கியுள்ளார்.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் மேகதாது அணைத் திட்டத்திற்கு எதிராக அதிமுக எம்.பிக்கள் தொடர் அமளியில் ஈடுபட்டு வந்த நிலையில், மக்களவையில் இருந்து அதிமுக எம்.பிக்களை சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் சுமித்ரா மகாஜன் உத்தரவிட்டுள்ளார். தொடர் அமளியில் ஈடுபட்டு அவை நடவடிக்கைக்கு குந்தகம் விளைவித்ததாக 5 அமர்வுகளில் பங்கேற்கத் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன்,
தமிழக ஆட்சியாளர்கள் மத்திய அரசுக்கு மிகவும் வேண்டியவர்களாக இருக்கிறார்கள். வாரவாரம் அமைச்சர்கள் விமானத்தில் டெல்லிக்கு பறந்து கொண்டுள்ளார்கள். ஆனால் இவர்களால் ஒன்றுமே பெற முடியவில்லையே.
மத்தியில் இருப்பவர்கள் சொல்லும் பேச்சை கேட்டு அதனை செயல்படுத்தும் சேவகர்களாக தானே இருக்கிறார்களே தவிர, இவர்கள் கேட்கும் எதுவும் முதலாளியிடமிருந்து வருவதில்லை என்பது நன்றாக தெரிகிறது.
கேபினட் முடிவெடுத்துவிட்டதால் ஸ்டெர்லைட் ஆலை திறக்க முடியாது என்று ஆட்சியாளர்கள் கூறியபோது மேல்முறையீடு சென்றால் ஆலை திறப்பை தடுக்க முடியாது என எல்லோரும் சொன்னோம்.
தமிழகத்திற்கு தாமிர ஆலையே வேண்டாம் என கொள்கை முடிவெடுத்து அதனை மத்திய அரசுக்கு அனுப்ப வேண்டும். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின்போது ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக திடீரென்று திமுக தலைவர் ஸ்டாலின் பேசினார். இப்போது ஜெயலலிதா மரணம் தொடர்பாக சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
ஆர்.கே.நகரில் டெபாசிட் போனது போல திருவாரூரிலும் போய் விடக் கூடாது என்பதற்காகத் தான் எதையாவது பேசி ஜெயலலிதாவின் மரணத்தை வைத்து அரசியல் செய்கிறார்கள் என்றார்.
மேலும், அணிகள் இணைப்பு குறித்து எங்களிடம் யாரும் பேச்சுவார்த்தை நடத்தவில்லை, துரோகிகளுடன் நாங்கள் இணைய மாட்டோம். நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது, உடன்பாடு ஏற்படாவிட்டால் தனித்து போட்டியிடுவோம்.
திருவாரூர் இடைத்தேர்தலில் அமமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் நாளை தஞ்சாவூரில் அறிவிக்கப்படுவார் என்று அவர் கூறினார்.
(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)