This Article is From Dec 29, 2018

இடைநிலை ஆசிரியர்களை அலட்சியப்படுத்தும் தமிழக அரசு: வைகோ காட்டம்

ஆசிரியர்களை அறப்போராட்டக் களத்தில் நீடிக்க விடுவது பள்ளிக் கல்வித்துறைக்கு கரும்புள்ளி ஆகிவிடும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

இடைநிலை ஆசிரியர்களை அலட்சியப்படுத்தும் தமிழக அரசு: வைகோ காட்டம்

கடந்த 24 ஆம் தேதி முதல் சென்னையில் இருக்கும் டிபிஐ வளாகத்தில், தமிழக அரசு பள்ளிகளிப் வேலை செய்யும் தற்காலிக ஆசிரியர்கள், ‘ஒரே வேலை ஒரே ஊதியம்' என்ற கோரிக்கையை முன் வைத்து தொடர்ந்து போராட்டம் செய்து வருகின்றனர். இன்று அந்தப் போராட்டம் 6வது நாளை அடைந்துள்ளது.

கடுமையான வெயில், இரவு நேரங்களில் பனி என எதையும் பொருட்படுத்தாமல், ‘அரசு கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை போராட்டம் தொடரும்' என்று அறிவித்துள்ளனர் ஆசிரியர்கள்.

தற்காலிக ஆசிரியர்கள் போராட்டத்துக்கு, பல்வேறு அரசியல் கட்சிகளும் அமைப்புகளும் தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், இதுகுறித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,

சமவேலைக்கு சம ஊதியம் என்ற ஒற்றைக் கோரிக்கையை முன்வைத்து இரண்டு ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் தங்கள் குடும்பத்துடன் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களில் இதுவரை 200 பேர் உடல்நிலை பாதிக்கப்பட்டு, ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கடும் வெயிலையும், குளிரையும் பொருட்படுத்தாமல் மனைவி, கணவன், குழந்தைகள் என குடும்பத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கையை பரிசீலிக்காமல், “ஒரு நபர் குழு அறிக்கை தாக்கல் செய்தால்தான் முடிவு எடுக்க முடியும்” என்று பள்ளிக் கல்வித்துறைச் செயலாளர் பிரதீப் யாதவ் மிக அலட்சியமாகக் கூறி இருப்பது கண்டனத்துக்கு உரியது.

2009-ம் ஆண்டில் நடைமுறைப்படுத்தப்பட்ட 6-வது ஊதியக்குழுவில், 31.5.2009-க்கு முன்னர் நியமனம் ஆன இடைநிலை ஆசிரியர்களுக்கு அடிப்படை ஊதியம் ரூ.8370 என்றும், ஒரு நாள் கழித்து அதாவது 1.6.2009-க்குப் பின்னர் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ.5200 அடிப்படை ஊதியம் என்றும் நிர்ணயம் செய்யப்பட்டது.

‘ஒரே கல்வித் தகுதி ஒரே பணி' ஆனால் இருவேறு ஊதிய விகிதங்கள். இந்த முரண்பாட்டைக் களைய வேண்டும் என்று கடந்த 10 ஆண்டுகளாக இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் சங்கம் பல கட்டப் போராட்டங்களை நடத்தி வருகிறது.

2016 பிப்ரவரி மாதம் 8 நாட்கள் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்திய ஆயிரக்கணக்கான இடைநிலை ஆசிரியர்களில் பலரின் உடல்நிலை மோசமானபோது, முதல்வர் ஜெயலலிதா, “ஊதிய முரண்பாடுகள் களையப்படும்” என்று உறுதி அளித்தார்.

ஆனால் இந்த நிலை தொடர்ந்து, 7-வது ஊதியக் குழு நடைமுறையிலும் வஞ்சிப்பதைக் களைய வேண்டும் என்று கோரி 2018, ஏப்ரல் மாதம் மீண்டும் இடைநிலை ஆசிரியர்கள் குடும்பத்துடன் உண்ணாநிலை அறப்போரில் ஈடுபட்டனர்.

இடைநிலை ஆசிரியர்களின் இடையறாத அறபோராட்டத்தின் விளைவாக, ஊதிய முரண்பாடுகள் குறித்து ஆய்வு செய்திட தமிழக அரசு ஒரு நபர் ஊதியக் குழுவை அமைத்தது. ஆனால், கடந்த 8 மாதங்களாக அந்தக் குழு தனது அறிக்கையைத் தரவில்லை. தமிழக அரசும் அது குறித்து கவனத்தில் கொள்ளாமல் இடைநிலை ஆசிரியர்களை அலட்சியப்படுத்தி வருகிறது.

இடைநிலை ஆசிரியர்களின் ‘சம வேலைக்கு சம ஊதியம்' என்ற நியாயமானக் கோரிக்கையை நிறைவேற்ற உடனடியாக தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள முன்வரவேண்டும். சிறப்பான முறையில் இயங்கி வரும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் இடைநிலை ஆசிரியர்களை கைவிட்டுவிடக் கூடாது. ஆசிரியர்களை அறப்போராட்டக் களத்தில் நீடிக்க விடுவது பள்ளிக் கல்வித்துறைக்கு கரும்புள்ளி ஆகிவிடும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


 

.