தமிழகத்தில் 100 நாள் வேலைத்திட்டத்துக்கு அனுமதி; அரசாசை வெளியீடு
ஹைலைட்ஸ்
- தமிழகத்தில் 100 நாள் வேலைத்திட்டத்துக்கு அனுமதி அளித்து அரசாணை
- மத்திய, மாநில அரசு அலுவலகங்கள் 33% ஊழியர்களுடன் இயங்க அனுமதி
- ஊரகப் பகுதிகளில் கட்டுமானப் பணிகள் நடைபெற அனுமதி
தமிழகத்தில் 100 நாள் வேலைத்திட்டத்துக்கு அனுமதி அளித்து அரசாணை வெளியிப்படப்பட்டுள்ளது. இதேபோல், இரும்பு, சிமெண்ட், பெயிண்ட் உள்ளிட்ட ரசாயன ஆலைகள் தொடர்ந்து இயங்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க தமிழகத்தில் கடந்த மார்ச்.24ம் தேதி முதல் ஏப்ரல்.14ம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அத்தியாவசிய பொருட்கள் வாங்க மட்டுமே பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வர அனுமதிக்கப்பட்டது. ஆனாலும், கொரோனா நோய் தொற்று அதிகரித்ததை தொடர்ந்து வருகிற மே.3ம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கும் என்று பிரதமர் மோடி அறிவித்தார். முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் தமிழகத்தில் மே.3ம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கும் என்றார்.
ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்பட்ட நிலையில் சில தொழிற்சாலைகள், உற்பத்தி நிறுவனங்களுக்கு பாதுகாப்புடன் கூடிய முறையில் அனுமதி வழங்கலாம் என மத்திய அரசு தெரிவித்திருந்தது. ஆனாலும் 19 பேர் கொண்ட நிபுணர் குழு அளித்த பரிந்துரைப்படி 20-ம் தேதிக்கு பின்னர் தளர்வு இல்லை ஊரடங்கு நீடிக்கும் என முதல்வர் அறிவித்தார்.
இந்நிலையில், இன்றியமையா உற்பத்தி மற்றும் தொடர் செயல்பாடுகளை கொண்டவற்றைத் தவிர பிற தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. இதுதொடர்பாக இன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொழிலதிபர்களுடன் காணொலியில் ஆலோசனை நடத்தினார்.
அப்போது, தமிழகத்தில் சில தொழிற்சாலைகளை படிப்படியாக அனுமதிப்பது, கொரோனா பரவாமல் இருக்க தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தினார்.
இதனை தொடர்ந்து, தமிழகத்தில் எந்தெந்த ஆலைகள் தொடர்ந்து இயங்கலாம் என்ற அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. சுத்திகரிப்பு நிலையங்கள், இரும்பு, சிமெண்ட், பெயிண்ட் உள்ளிட்ட ரசாயன ஆலைகள், கரும்பு, உர கண்ணாடி, டயர், மிகப்பெரிய காகித ஆலைகள் ஆகியவை தொடர்ந்து இயங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், தமிழகத்தில் 100 நாள் வேலைத்திட்டத்திற்கு அனுமதி வழங்ப்பட்டுள்ளது. அதே நேரத்தில் மூன்றில் ஒரு பகுதியினர் மட்டுமே பணியில் ஈடுபட வேண்டும் என்றும் பணியில் ஈடுபடுவோர் தனி மனித இடைவெளியினை கடைபிடிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. கொரோனா அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு இது பொருந்தாது.
மத்திய, மாநில அரசு அலுவலகங்கள் 33% ஊழியர்களுடன் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஊரகப் பகுதிகளில் கட்டுமானப் பணிகள் நடைபெற அனுமதி. நீர்ப்பாசனம், அணை பாதுகாப்பு மற்றும் கட்டுமானம், சாலைகள், மேம்பாலங்கள், நீர் வழங்கல் மற்றும் சுகாதாரம், செங்கல் சூளை பணிகள், மருத்துவமனை மற்றும் மருத்துவக்கல்லூரி கட்டுமானப்பணிகள், மின்சாரப் பணிகள் உள்ளிட்டவை இயங்கலாம்.
மேற்குறிப்பிட்ட பணிகளின்போது கொரோனா பரவாமல் இருக்க தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.