வாரத்திற்கு ரூ.1,000 வீதம் வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
ஹைலைட்ஸ்
- வாரத்திற்கு ரூ.1,000 வீதம் வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும்:
- தமிழ்நாட்டை கொரோனா நோய் இல்லாத மாநிலமாக உருவாக்க வேண்டும்
- அதிக எண்ணிக்கையில் சோதனைகள் செய்யப்படுவதும் அவசியம் ஆகும்.
தமிழகத்தில் ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட இலவச உணவுப் பொருட்களுடன், கூடுதலாக வாரத்திற்கு ரூ.1,000 வீதம் வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவலை கட்டுபடுத்தும் விதமாக ஏப்.14ம் தேதி வரை அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவு மே.3ம் தேதி வரை நீட்டித்து பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். மேலும், நாட்டு மக்களிடம் உரையாற்றிய பிரதமர் மோடி, பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.
முன்னதாக, தமிழகத்தில் கொரோனா வைரஸ் நோய் பரவலைத் தடுக்க ஏப்.30-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.
இந்நிலையில் ஊரடங்கு நீட்டிப்பு தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியதாவது, அமைப்பு சாரா தொழிலாளர்களும், அன்றாடம் வாழ்வாதாரம் ஈட்டும் மக்களும் அதிகமுள்ள தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் ஊரடங்கை நடைமுறைப்படுத்துவது எளிதான ஒன்றல்ல. மக்களைக் காக்க வேறு வழியின்றி எடுக்கப்பட்ட முடிவு தான் ஊரடங்கை நடைமுறைப்படுத்துவதாகும்.
ஊரடங்கு ஆணை பிறப்பிக்கப்பட்டதால், தற்காலிகமாக நாம் கல்வியை இழந்தோம்; வேலைவாய்ப்பை இழந்தோம்; வாழ்வாதாரம் இழந்தோம்; பொருளாதாரம் இழந்தோம் என்பவை எல்லாம் மறுக்க முடியாத உண்மைகள். ஆனால், இவை அனைத்துமே கொரோனா என்ற கொடிய வைரஸை ஒழிப்பதற்காக நாம் செய்யும் தியாகங்கள் தான். இந்த தியாகங்களை செய்யாமல் கொரோனா வைரஸை ஒழிக்க முடியாது.
இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் கொரோனா பரவல் முழுமையாக கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்றால், ஊரடங்கு ஆணை மேலும் சில வாரங்களுக்கு நீட்டிக்கப்படுவதும், அதிக எண்ணிக்கையில் சோதனைகள் செய்யப்படுவதும் அவசியம் ஆகும்.
ஊரடங்கால் பொதுமக்கள் வாழ்வாதாரங்களை இழந்து தவிக்கும் நிலையில், அவர்கள் பட்டினியின்றி வாழ்ந்தால் தான், அவர்களின் ஒத்துழைப்புடன் ஊரடங்கு முழுமையாக வெற்றி பெறும்.
அதை உறுதி செய்யும் வகையில் தான் தமிழகத்தில் அரிசி குடும்ப அட்டைகளை வைத்திருப்பவர்கள் அனைவருக்கும் ஒரு மாதத்திற்கான அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட பொருட்கள் இலவசமாக வழங்கப்படும்; அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் அனைவருக்கும் இரண்டாவது முறையாக தலா ரூ.1,000 உதவியாக வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் அறிவித்துள்ளார்.
அத்துடன் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஊரடங்கு காலத்தில் ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட இலவச உணவுப் பொருட்களுடன், கூடுதலாக வாரத்திற்கு ரூ.1,000 வீதம் வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும். வாழ்வாதாரம் இழந்த மக்கள் பசியின்றி வாழ இது அவசியமாகும். இத்தகைய நடவடிக்கைகளின் மூலம் அரசும், பொதுமக்களும் இணைந்து பணியாற்றி, தமிழ்நாட்டை கொரோனா நோய் இல்லாத மாநிலமாக உருவாக்க வேண்டும்" என்று அவர் தெரிவித்துள்ளார்.