1000 யூனிட்டிற்கான மின்கட்டணத்தை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்
ஹைலைட்ஸ்
- 1000 யூனிட்டிற்கான மின்கட்டணத்தை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும்
- வருமானம் இல்லாத நிலையில், மின்கட்டணத்தை மட்டும் எவ்வாறு செலுத்த முடியும்?
- அத்தியாவசியக் கட்டணங்களுக்கே கடன் வாங்கித் தான் செலுத்த வேண்டியிருக்கும்
மார்ச், ஏப்ரல் மாதங்களில் ஒரு மாதத்திற்கு 500 யூனிட் வீதம் 2 மாதத்திற்கு 1000 யூனிட்டிற்கான மின்கட்டணத்தை ரத்து செய்யுமாறு, பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவலை கட்டுபடுத்தும் விதமாக ஏப்.14ம் தேதி வரை அமல்படுத்தப்பட்ட 21 நாள் ஊரடங்கு உத்தரவை மே.3ம் தேதி வரை நீட்டித்து பிரதமர் மோடி நேற்றைய தினம் உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து, நாடு முழுவதும் 2ம் கட்ட ஊரடங்கு இன்று முதல் அமலாகியுள்ளது.
இதனால், கிட்டதட்ட 40 நாட்களாக வேலைகளுக்கு செல்லாமல், எந்த வருமானமும் இல்லாத நிலையில், ஏழை மற்றும் நடுத்தர மக்களால் மின்கட்டணத்தை மட்டும் எவ்வாறு செலுத்த முடியும்? என கேள்வி எழுப்பிய அன்புமணி ராமதாஸ், 1000 யூனிட்டிற்கான மின்கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக மேலும் அவர் கூறியதாவது, கல்விக்கட்டணம், மாதாந்திர கடன் தொகை ஆகியவற்றை செலுத்த கால அவகாசம் வழங்கப் பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 90% மக்களுக்கு எந்த வருமானமும் இல்லாத நிலையில், ஏழை மற்றும் நடுத்தர மக்களால் மின்கட்டணத்தை மட்டும் எவ்வாறு செலுத்த முடியும்? என அரசு சிந்திக்க வேண்டும்.
ஊரடங்கு ஆணை மே 3-ம் தேதி விலக்கிக் கொள்ளப்பட்டால் கூட, அதன்பின் இயல்பு நிலை திரும்பி அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு மீண்டும் வேலை கிடைத்து வருவாய் ஈட்டுவதற்கு இன்னும் சில மாதங்களாவது ஆகும். அதற்குள்ளாக கல்விக்கட்டணம் உள்ளிட்ட பல்வேறு அத்தியாவசியக் கட்டணங்களை கடன் வாங்கித் தான் செலுத்த வேண்டியிருக்கும். அத்துடன் மின்கட்டணத்தையும் செலுத்துவது என்பது இன்றைய சூழலில் ஏழை மற்றும் நடுத்தர மக்களால் சற்றும் சாத்தியமற்றதாகும்.
எனவே, ஏழை மற்றும் நடுத்தர மக்களின் நிலையை கருத்தில் கொண்டு மார்ச் மற்றும் ஏப்ரல் மாத சுழற்சியில் செலுத்த வேண்டிய மின்கட்டணத்தில், மாதத்திற்கு 500 யூனிட்டுகள் வீதம் இரு மாதங்களுக்கு 1,000 யூனிட்டுகளுக்கான மின்சார கட்டணத்தை ரத்து செய்ய தமிழக அரசு முன்வர வேண்டும்" என அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.