கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரண பணிகளை மேற்கொள்ளாமல் தமிழக அரசு நாடகம் நடத்தி வருவதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் திமுக சார்பாக நிவாரண பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சில நாட்களுக்கு முன்பாக சென்னையில் இருந்து லாரி லாரியாக நிவாரண பொருட்கள் புயல் பாதிப்பு பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதனை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து அனுப்பி வைத்தார்.
நிவாரண பணிகள் தமிழக அரசு சார்பாக நடைபெற்று வரும் நிலையில் அதனை ஸ்டாலின் தொடர்ந்து விமர்சித்து வருகிறார். இந்த நிலையில் சென்னை விமான நிலையத்தில் அவர் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது-
நிவாரண பணிகளை செய்யாமல் தமிழக அரசு நாடகம் நடத்திக் கொண்டிருக்கிறது. அடிப்படையான நிவாரண பணிகளில் இந்த அரசு இன்னும் ஈடுபடவில்லை. ஆட்சியைக் காப்பாற்றிக் கொள்வதில்தான் அதிமுகவினர் குறியாக உள்ளனர்.
மாற்றுத் திறனாளிகள் இன்று போராட்டம் நடத்துகின்றனர். ஜாக்டோ ஜியோ போராட்டம் அறிவித்திருக்கிறது. கஜா புயலில் வாழ்வாதாரத்தை இழந்தவர்கள் மறியலில் ஈடுபட்டுள்ளனர்.
இது எதனையும் தமிழக அரசு கண்டுகொள்ளவில்லை. கமிஷன், கலெக்ஷன், கரெப்ஷன் என்பதில்தான் அதிமுகவினர் உறுதியாக உள்ளனர்.
இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறினார்.