This Article is From Feb 19, 2020

சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தத் தமிழக அரசு முன்வர வேண்டும்; ராமதாஸ்!

மாநில அளவில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த ஒடிசா தீர்மானித்திருப்பதற்கு என்னென்ன காரணங்கள் உண்டோ, அவை அனைத்தும் தமிழகத்திற்கும் பொருந்தும்.

சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தத் தமிழக அரசு முன்வர வேண்டும்; ராமதாஸ்!

மாநில அளவில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த தமிழக அரசும் முன்வர வேண்டும்

மாநில அளவில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தத் தமிழக அரசும் முன்வர வேண்டும் என பா.ம.க நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். 

தமிழகத்தில் 2021-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தும்போது சாதிவாரி மக்கள் கணக்கெடுப்பு நடத்த வலியுறுத்தி, பாட்டாளி இளைஞர் சங்கம் சார்பில் சென்னையில் பிப்.6 -ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட ராமதாஸ் பேசியபோது, மத்திய அரசு நடத்திய கணக்கெடுப்பில் இந்தியா முழுவதும் 4,400-க்கும் மேற்பட்ட சாதிகள் உள்ளன என்றும் தமிழகத்தில் மட்டும் 370 சாதிகள் உள்ளன என்றும் கூறினார்.  

சமநிலையற்ற, சமூகநீதியற்ற சமுதாயத்தில்தான் நாம் வாழ்கிறோம். இதைச் சரிசெய்வதற்காகத்தான் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தச் சொல்கிறோம். சமூக நீதி அடிப்படையில் கல்வி,வேலைவாய்ப்பு, பொருளாதாரத்தில் எல்லோருக்கும் சமமான வாய்ப்புகள் கிடைப்பதற்குச் சாதிவாரி கணக்கெடுப்பு அவசியம். 

இது, பெரியார் விட்டுச் சென்ற கோரிக்கைதான். எனவே, இக்கோரிக்கை நிறைவேற நாம் அயராது பாடுபடுவோம். இக்கோரிக்கை நிறைவேறாவிட்டால் கடுமையான போராட்டம் நடத்துவதைத் தவிர நமக்கு வேறுவழியில்லை என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதற்கான தீர்மானம் ஒடிசா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டியுள்ள ராமதாஸ் அதனைத் தமிழக அரசும் பின்பற்ற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். 


இதுதொடர்பாக ராமதாஸ் தனது டிவிட்டர் பதிவில் கூறியதாவது, ஒடிசாவில் பிற்படுத்தப்பட்டோரின் சாதிவாரி சமூக பொருளாதார கணக்கெடுப்பு நடத்துவதற்கான சட்டத் திருத்தமும், தீர்மானமும் அம்மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளன. மத்திய அரசு இத்தகைய கணக்கெடுப்பு நடத்தாத நிலையில், ஒடிசா அரசே கணக்கெடுப்பு மேற்கொள்வது பாராட்டத்தக்கது.

மாநில அளவில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த ஒடிசா தீர்மானித்திருப்பதற்கு என்னென்ன காரணங்கள் உண்டோ, அவை அனைத்தும் தமிழகத்திற்கும் பொருந்தும். எனவே, மாநில அளவில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தத் தமிழக அரசும் முன்வர வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார். 

.