தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 2.51 லட்சத்தினை கடந்துள்ள நிலையில், தொடர்ந்து தொற்று பரவல் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. கடந்த மூன்று நாட்களாக தொற்று எண்ணிக்கை 6 ஆயிரத்திலிருந்து 5 ஆயிரமாக குறைந்த நிலையில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்திற்கு தொற்று அறிகுறி ஏற்பட்டிருந்தது.
இந்நிலையில் இன்று காலை சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு சென்றிந்தார்.
இந்நிலையில் அவருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக காவேரி மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஆனால், தொற்றுக்கான அறிகுறி பெரிய அளவிற்கு இல்லாததால் வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அறிக்கை குறிப்பிட்டுள்ளது.
ஆளுநர் மாளிகையில் காவலர்கள், ஊழியர்கள் உட்பட ஏற்கெனவே 80க்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் கடந்த 7 நாட்களாக ஆளுநர் தன்னை தனிமைப்படுத்திக்கொண்ட நிலையில் காலை மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு சென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.