This Article is From Sep 15, 2018

எழுவர் விடுதலைக்கான பரிந்துரை: உள்துறை அமைச்சகத்திடம் கருத்து கேட்ட ஆளுநர்!

சிறையில் உள்ள 7 பேரையும் விடுவிக்க ஆளுநருக்கு பரிந்துரை செய்தது தமிழக அமைச்சரவை

எழுவர் விடுதலைக்கான பரிந்துரை: உள்துறை அமைச்சகத்திடம் கருத்து கேட்ட ஆளுநர்!

ராஜீவ் காந்தி கொலை வழக்கின் குற்றவாளிகளை விடுதலை செய்வதற்கு தமிழக அரசு, ஆளுநருக்கு பரிந்துரை செய்துள்ளது. இந்த பரிந்துரை குறித்து கருத்து தெரிவிக்குமாறு மத்திய உள்துறை அமைச்சகத்திடம் கேட்டுள்ளார் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் என்று அரசு அதிகாரி ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார்.

சட்ட சாசனத்தின் 161-வது பிரிவின் மூலம், சிறையில் இருக்கும் கைதிகளுக்கு ஆளுநரால் மன்னிப்பு வழங்க முடியும். இந்த அதிகாரத்தை பயன்படுத்துமாறு தான் தமிழக ஆளுநருக்கு பரிந்துரை செய்துள்ளது அரசு.

இந்நிலையில் தான் இது குறித்து கருத்து தெரிவிக்குமாறு உள்துறை அமைச்சகத்தைக் கேட்டுள்ளார் ஆளுநர்.

உள்துறை அமைச்சகத்தின் சட்டப் பிரிவு, இந்த வழக்கில் இருக்கும் சட்ட நடைமுறைகளை ஆய்வு செய்து ஆளுநருக்கு கருத்து தெரிவிக்கும் என்று அந்த அதிகாரி கூறியுள்ளார்.

ஆளுநருக்கு, விடுதலைக்கு உத்தரவிட அதிகாரம் இருந்தாலும், இந்த வழக்கு அதன் கீழ் வராது என்று முன்னர் தெரிவிக்கப்பட்டது. சிபிஐ இந்த வழக்கை விசாரித்ததால், ஆளுநர் மத்திய அரசிடம் கருத்து கேட்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.

பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட முருகன், பேரறிவாளன், சாந்தன், ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ், ரவிசந்திரன், நளினி உள்ளிட்ட ஏழு பேர் கடந்த 27 வருடங்களாக சிறையில் உள்ளனர்.

இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள 7 பேரை விடுவிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்திருந்தது. கடந்த செப்டம்பர் 7 ஆம் தேதி, நீதிபதிகள் ரஞ்சன் கோகாய், நவீன் சின்ஹா, கே.எம்.ஜோசப் ஆகிய மூவர் கொண்ட அமர்வு இந்த வழக்கை விசாரித்தது.

அப்போது, ‘குற்றம் சுமத்தப்பட்ட 7 பேர் குறித்து முடிவெடுக்க தமிழக அரசுக்கு உரிமையுண்டு. அவர்கள் ஆளுநருக்கு விடுதலை குறித்து பரிந்துரை செய்யலாம்’ என்று தெரிவித்தது. இதைத் தொடர்ந்து சிறையில் உள்ள 7 பேரையும் விடுவிக்க ஆளுநருக்கு பரிந்துரை செய்தது தமிழக அமைச்சரவை.



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
.