தமிழக அரசு‘கணக்கில் வராமல்’ ஆயிரக்கணக்கான இறப்புகளை மறைத்திருக்க வாய்ப்பு: ஸ்டாலின் சாடல்
கொரோனா வைரஸ் பாதிப்பால் ஜூன் 10 வரை ‘கணக்கில் வராமல்' இறந்தவர்களின் எண்ணிக்கை 444 என்று தமிழக முதல்வர் ஒத்துக்கொண்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழக சுகாதாரத்துறை தரப்பில் நேற்று மாலை வெளியிடப்பட்ட மருத்துவ அறிக்கையில், இதுவரை இல்லாத அளவு ஒரே நாளில் அதிகபட்சமாக 5,849 பேர் பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இதைத்தொடர்ந்து, மொத்த பாதிப்பு எண்ணிக்கையானது, 1,86,492 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
சென்னையில் நேற்று ஒரே நாளில் 1171 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், சென்னையில் ஒட்டுமொத்தமாக பாதிப்பு எண்ணிக்கை 90 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.
தமிழகத்தில் நேற்றைய தினம் மட்டும், கொரோனாவால் 74 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும், அதிர்ச்சியாக, சென்னையில் வேறு காரணங்களால் இறந்ததாகக் கூறி, கணக்கில் சேர்க்கப்படாத 444 மரணங்கள் சேர்க்கப்பட்டுள்ளதால், மொத்த உயிரிழப்பு 1939-ஆக அதிகரித்துள்ளது. இதன்மூலம், தமிழகம் முழுவதும் உயிரிழப்பு எண்ணிக்கையானது 3,144-ஆக அதிகரித்துள்ளது.
நேற்று முன்தினம் வரைக்கும் 2,700 பேர் மட்டுமே இறந்துள்ளதாக அரசு கூறிய நிலையில், ஒரே நாளில் எப்படி 3 ஆயிரத்து 144 எப்படி ஆனது? என பலரும் கேள்வி எழுப்பினர்.
இந்நிலையில், இதுதொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பதிவில் கூறியதாவது, எனது தொடர்ச்சியான அழுத்தத்திற்கு பின் கொரோனாவால் ஜூன் 10 வரை ‘கணக்கில் வராமல்' இறந்தவர்களின் எண்ணிக்கை 444 என்று தமிழக முதல்வர் ஒத்துக்கொண்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.
இதற்கு முன், ஜூன் 10 வரை தமிழகம் முழுவதும் இறந்தோரின் எண்ணிக்கை வெறும் 326 என்று மூன்றில் ஒரு பங்கு கணக்கை மட்டுமே காட்டினார்கள். இன்னும் எத்தனை அப்பாவி மக்களின் இறப்பினை மறைத்துள்ளீர்கள் பழனிசாமி?
சென்னையில் மட்டும் 444 இறப்புகளை குறைவாக காட்டிய இந்த அரசு, பிற மாவட்டங்களிலும் இதேபோல் ஆயிரக்கணக்கான இறப்புகளை மறைத்திருக்க வாய்ப்புள்ளது. இத்தகைய அப்பட்டமான பொய்களுக்கு பின்னர், இந்த அரசு கூறுவதை எல்லாம் மக்கள் எப்படி நம்புவார்கள்?
'கணக்கிடத் தவறிய' 444 என்பது வெறும் எண்ணிக்கை இல்லை; ஒவ்வொரு குடும்பத்தின் பேரிழப்பு. இதுவரை கணக்கிடப்படாத இறப்புகள் அனைத்தையும் தமிழக முதல்வர் மொத்தமாக வெளியிட வேண்டும்.
பேரிடர் சூழலில் நேர்மையோடும் அறத்தோடும் செயல்படும் அரசே தேவை; மறைக்கும், மக்களை வஞ்சிக்கும் அரசு அல்ல என்று அவர் தெரிவித்துள்ளார்.