This Article is From Jan 28, 2019

நாளை காலைக்குள் ஆசிரியர்கள் பணிக்குத் திரும்ப வேண்டும்: இறுதி எச்சரிக்கை!

நாளை காலை 9 மணிக்குள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் பணிக்குத் திரும்பாவிட்டால் காலிப்பணியிடங்களாக அறிவிக்கப்படும் என பள்ளி கல்வித்துறை இறுதி எச்சரிக்கை அளித்துள்ளது.

நாளை காலைக்குள் ஆசிரியர்கள் பணிக்குத் திரும்ப வேண்டும்: இறுதி எச்சரிக்கை!

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல் செய்ய வேண்டும் உட்பட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்களின் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோவில் அங்கம்

வகிக்கும் ஆசிரியர்கள், மற்றும் அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 22-ம் தேதி முதல் தொடங்கிய இந்தப் போராட்டம்

தொடர்ந்து இன்று 7வது நாளாக நடந்து வருகிறது.

இதனிடையே, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் அனைவரும் இன்றைக்குள் பணிக்குத் திரும்ப இறுதியாக எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. பணிக்குத் திரும்பாத

ஆசிரியர்களின் பணியிடங்கள், காலிப்பணியிடங்களாக கருதப்பட்டும் என்றும் முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. ஆனால் தமிழக அரசின் எச்சரிக்கையும் மீறி

தமிழகம் முழுவதும் இன்றும் ஜாக்டோ- ஜியோ அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஜாக்டோ ஜியோ அமைப்பினரின் போராட்டத்தின் காரணமாக தமிழகம் முழுவதும் பல்வேறு பள்ளிகளில் ஆசிரியர்கள் வராத காரணத்தால் மாணவ, மாணவிகள் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.

இந்நிலையில், இன்றோடு அவகாசம் முடிந்த நிலையில், நாளை காலை 9 மணி வரை அவகாசம் நீடித்து செய்து பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் வெளியிட்டுள்ள செய்தியில்,

ஆசிரியர்கள் பணியில் சேர நாளை காலை 9 மணி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இன்று பணியில் சேராவிட்டால், பணியாற்றிய இடம் காலிப்பணியிடமாக அறிவிக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவர்கள் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. காலிப்பணியிடங்களை தற்காலிகமாக ஆசிரியர்கள் மூலமாக நியமனம் செய்ய துறையின் மூலம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

எம்.எம்.எஸ். வாட்ஸ் அப், தொலைபேசி அல்லது நேரிலோ தெரிவித்து விட்டு பணியில் சேரலாம். தங்கள் மாவட்ட கல்வி அலுவலர்களிடம் தகவல் தெரிவித்துவிட்டு உடனடியாக பணியில் சேரலாம். நாளை பணியில் சேர விரும்பும் ஆசிரியர்கள் தங்கள் அலுவலர்களிடம் தகவல் தெரிவித்து விட்டு சேரலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

.