This Article is From Jul 25, 2018

ஜெயலலிதா தொடர்பான வழக்கு: வீடியோ ஆதாரம் சமர்பித்த தமிழக அரசு!

இந்த வழக்கில் தமிழக அரசு சார்பில் அட்வகேட் ஜெனரல் விஜய் நாரயணன் ஆஜராகி மனுதாரருக்கு எதிராக வாதாடினார்

ஜெயலலிதா தொடர்பான வழக்கு: வீடியோ ஆதாரம் சமர்பித்த தமிழக அரசு!

‘நான்தான் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மகள். இதை நிரூபிக்க டி.என்.ஏ சோதனை செய்ய வேண்டும்’ என்று கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் அம்ருதா என்ற பெங்களூருவைச் சேர்ந்த பெண் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கில் தமிழக அரசு சார்பில் முக்கிய வீடியோ ஆதாரம் சமர்பிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் தமிழக அரசு சார்பில் அட்வகேட் ஜெனரல் விஜய் நாரயணன் ஆஜராகி மனுதாரருக்கு எதிராக வாதாடினார். 

அவர், ‘1980 ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 14 ஆம் தேதி அம்ருதா பிறந்துள்ளதாக கூறியுள்ளார். ஆனால், அந்நேரத்தில் ஜெயலலிதா பங்கேற்ற ஒரு நிகழ்ச்சியின் வீடியோவை சமர்பித்துள்ளேன். அதில், ஜெயலலிதா கர்ப்பமாக இருப்பதற்கு எந்தவித அறிகுறிகளும் இல்லை. இதுவரை அவர்தான் ஜெயலலிதாவின் மகள் என்பதற்கான ஒரு ஆதாரத்தைக் கூட நீதிமன்றத்தில் சமர்பிக்கவில்லை. அவர், முன்னாள் முதல்வரின் பெயருக்குக் கலங்கம் விளைவிக்கும் வகையில் இந்த வழக்கை தொடர்ந்துள்ளார்’ என்று வாதாடினார் நாராயணன்.

ஜெயலலிதா, 2016 ஆம் ஆண்டு இறந்து பல மாதங்கள் கழித்து தான் அம்ருதா, இந்த வழக்கை தொடர்ந்தார். இந்த தாமதம் குறித்து அம்ருதா, ‘எனது தந்தை, ஜெயலலிதா இறப்பதற்கு சில நாட்களுக்கு முன்னர் தான் உண்மையை என்னிடம் சொன்னார்’ என்று கூறினார். தொடர்ந்து அவர், ‘டி.என்.ஏ சோதனை மூலம் ஜெயலலிதா தான் என் தாய் என்பதை நிரூபிக்க முடியும். நீதிமன்றம் அதற்கு உத்தரவிட வேண்டும்’ என்று வலியுறுத்தி வருகிறார். 

வாதங்களை கேட்ட நீதிமன்றம், ‘ஜெயலலிதாவின் வாழ்க்கை மற்றும் இறப்பு என அனைத்துமே மர்மம் சூழ்ந்ததாகவே இருக்கிறது. தற்போது அம்ருதாவின் இந்த புகார் வரை எல்லாம் மர்மமாகவே உள்ளது’ என்று கருத்து கூறியுள்ளது. அடுத்த வாரம் மறுபடியும் இந்த வழக்கு விசாரணைக்கு வரும் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 
 



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
.