This Article is From Oct 06, 2018

குட்கா ஊழல் வழக்கு: டெல்லியில் மத்திய உயர் அதிகாரிகள் வீட்டில் சிபிஐ சோதனை!

தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள குட்கா ஊழல் வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது

குட்கா ஊழல் வழக்கு: டெல்லியில் மத்திய உயர் அதிகாரிகள் வீட்டில் சிபிஐ சோதனை!

குட்கா ஊழல் வழக்கு தொடர்பாக டெல்லியில் உள்ள இந்திய போட்டி ஆணையத்தின் (சிசிஐ) துணை இயக்குநர் ரவிச்சந்திரன் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். இதற்கு முன்னதாக ரவிச்சந்திரன் சென்னையில் உள்ள மத்திய சுங்கத்துறை நுண்பிரிவு அதிகாரியாக பணியாற்றியுள்ளார்.

தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள குட்கா ஊழல் வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் தொடர்புடையதாக கருதப்படும் மத்திய அரசு அதிகாரிகளின் வீடுகளில் கடந்த சில நாட்களாக சிபிஐ தீவிர சோதனை நடத்தி வருகிறது.

இந்த சோதனை குறித்து சிபிஐ அதிகாரிகள் கூறும்போது,

குட்கா ஊழல் வழக்கில் சிபிஐ அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விவகாரத்தில், 2013-15ஆம் ஆண்டுகளில் சென்னையில் உள்ள மத்திய சுங்கத்துறை நுண்பிரிவு அதிகாரியாக பணியாற்றிய ரவிச்சந்திரனின் கிழக்கு டெல்லியில் உள்ள வீட்டில் சோதனை நடத்தப்பட்டது

மேலும், இது தொடர்பாக மத்திய சுங்கத்துறை நுண்பிரிவு முன்னாள் உதவி ஆணையர் எஸ்.ஸ்ரீதரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அவருக்கு சொந்தமான இடங்களில் சோதனையும் நடத்தப்பட்டது.

இதேபோல், சரக்கு, சேவை வரித்துறையின் (ஜிஎஸ்டி) கூடுதல் ஆணையர் செந்தில் வளவனுக்கு சொந்தமான இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டது. இதுதொடர்பாக விசாரணைக்கு ஆஜராகுமாறு அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது என்றனர்.



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
.