வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது கற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறுவதால் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் 2 நாட்களுக்கு பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
சென்னையில் நேற்று முன்தினம் இரவு முதல் மழை பெய்து வருகிறது. உள்தமிழகத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலைக்கொண்டு இருப்பதாகவும், இதனால் தமிழகத்தில் 12 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலசந்திரன் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது, தென்மேற்கு வங்ககடலில் நிலவி வந்த வலுவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிலந்துள்ளது. வலுகுறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வடமேற்கு திசையில் நகர்ந்து மேலும் வலுவிழக்கும். காற்றழுத்த தாழ்வு பகுதி வலு குறைந்ததால் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடையில்லை.
உள்மாவட்டங்களில் காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுவதால் 12 மாவட்டங்களில் கனமழை பெய்யும். அதாவது காஞ்சிபுரம், திருவண்ணாமலை, ஈரோடு, கரூர், சேலம், நாமக்கல், தருமபுரி, வேலூர், கிருஷ்ணகிரி, நீலகிரி, விழுப்புரம் மற்றும் புதுச்சேரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் 17 சதவீதம் குறைந்துள்ளது. சென்னையில் 45 சதவீதம் பருவமழை குறைந்துள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.