திடீரென்று உதவி கேட்டு அழைத்தவரிடம் பேசி சந்தேகங்களை தீர்த்து வைத்துள்ளார்.
ஹைலைட்ஸ்
- தமிழகத்தில் மூவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது
- இந்திய அளவில் 200-க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா பாதிப்பு உள்ளது
- இதுவரை நாட்டில் 4 பேர் கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழப்பு
தமிழகத்தில் கொரோனா வைரஸ் குறித்தும் அதற்கு எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் சந்தேகம் எழுந்தால், 104 என்ற எண்ணுக்கு அழைத்து, சந்தேகங்களைத் தீர்த்துக் கொள்ளலாம். 24 மணி நேரமும் இயங்கும் இந்த உதவி மையத்திற்கு தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சென்றுள்ளார். அங்கு ஆய்வுகளை மேற்கொண்ட அவர், திடீரென்று உதவி கேட்டு அழைத்தவரிடம் பேசி சந்தேகங்களை தீர்த்து வைத்துள்ளார்.
இது குறித்து, தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ளார் அமைச்சர் விஜயபாஸ்கர். வீடியோவில் அவர், கால் அட்டெண்டு செய்து, ஹாண்டு சானிடைசர் தேவையில்லை என்றும் சாதாரண சோப் பயன்படுத்தி கைகளை நன்றாக கழுவினால் போதும் என்றும் தகவல் கொடுக்கிறார். தொடர்ந்து, ‘எங்கிருந்து அழைக்கிறீர்கள்' என்று கேட்ட பின்னர் அழைப்பைத் துண்டிக்கிறார்.
வீடியோவுடன் அமைச்சர் விஜயபாஸ்கர், “104 உதவி மையத்துக்கு சென்றிருந்தேன். எந்த உதவி மையங்களுக்கு அழைத்தாலும் இந்த ஒரு எண்ணுக்கு அழைப்புகள் வரும்படி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இங்கு ஊழியர்கள் 24x7 பணி செய்கிறார்கள். மிகுந்த அனுபவம் வாய்ந்தவர்கள் என்பதால் அனைத்துக் கேள்விகளுக்கும் திறம்பட பதில் அளிக்கிறார்கள். நானும் ஆவடியிலிருந்து வந்த ஒரு அழைப்பை அட்டெண்டு செய்து தகவல் கொடுத்தேன்,” எனப் பதிவிட்டுள்ளார்.