எச்.ஐ.வி. ரத்தம் செலுத்தப்பட் பெண்ணுக்கு உயர்தர சிகிச்சை அளிக்கப்படும் என்று சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் அரசு மருத்துவமனையில் கர்ப்பிணிக்கு எச்.ஐ.வி. பாதிக்கப்பட்ட நபரின் ரத்தம் செலுத்தப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. கர்ப்பிணி என்பதால் அவரது குழந்தைக்கும் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறதா என்பது உறுதி செய்யப்படவில்லை.
குழந்தை பிறந்த பிறகுதான் அதற்கு எச்.ஐ.வி. பாதிப்பு இருக்கிறதா இல்லையா என்பதை தெரிவிக்க முடியும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அலட்சியம் காரணமாக கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் 3 ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
கர்ப்பிணி பெண்ணுக்கு கடந்த 3-ம்தேதியன்று எச்.ஐ.வி. பாதிக்கப்பட்ட இளைஞர் ஒருவரின் ரத்தம் செலுத்தப்பட்டிருக்கிறது. அப்போது தனக்கு செலுத்தப்பட்டது எச்.ஐ.வி. பாதிப்பு ரத்தம்தான் என அந்தப் பெண்ணுக்கு தெரியாது.
பின்னர் வெளிநாட்டு வேலைக்கு செல்வதற்காக தனியார் மருத்துவனையில் சோதித்து பார்த்தபோது கர்ப்பிணியின் ரத்தம் எச்.ஐ.வி. பாசிட்டிவ் என தெரியவந்தது. இதையடுத்து இந்த விவகாரம் பெரிதாகத் தொடங்கியது.
விசாரணையில், சம்பந்தப்பட்ட இளைஞர் 2 ஆண்டுகளுக்கு முன்பே மருத்துவமனையில் ரத்த தானம் செய்திருக்கிறார். அப்போதே அவருக்கு எச்.ஐ.வி. பாதிப்பு இருந்துள்ளது. ஆனால் அதுபற்றி அவரிடம் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்படவில்லை.
இந்தநிலையில், பாதிக்கப்பட்ட பெண்ணை சந்தித்து சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் ஆறுதல் தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், பணியின்போது கவனக்குறைவாக இருந்த சிவகாசி அரசு மருத்துவமனை ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
எச்.ஐ.வி. ரத்தம் செலுத்தப்பட்ட பெண்ணுக்கு உயர்தர சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்து வருகிறோம். இந்த சம்பவம் துரதிருஷ்டவசமானது. கருவில் இருக்கும் குழந்தைக்கு எச்.ஐ.வி. வராமல் தடுக்க சிகிச்சை அளிக்கப்படும்.
நடந்திருக்கும் சம்பவம் துரதிருஷ்டவசமானது. இதற்கு உரிய நிவாரணம் வழங்க முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவுரை வழங்கியுள்ளார். பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.