முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் மறைவுக்கு தமிழகத்தைச் சேர்ந்த முக்கிய தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவின் 10-வது பிரதமரான வாஜ்பாய், சிறுநீரக தொற்று மற்றும் இதய நோய் காரணமாக சிகிச்சை பெற்று வந்தார். இன்று காலை அவரது உடல் நிலையில் முன்னேற்றம் இல்லை என்றும், அவர் தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாகவும் எய்மஸ் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது. அதனை தொடர்ந்து, இன்று மாலை 05.05 மணி அளவில் வாஜ்பாய் இயற்கை எய்தினார்.
வாஜ்பாயின் மறைவிற்கு, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், திமுக கட்சி செயல் தலைவர் ஸ்டாலின், மதிமுக தலைவர் வைகோ, நடிகர் ரஜினிகாந்த், கவிஞர் வைரமுத்து, தேமுதிக தலைவர் விஜயகாந்த், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில், “முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் மறைவு இந்தியாவிற்கே பேரிழிப்பு” என்று தெரிவித்துள்ளார்.
“அரசியல்வாதிகளுக்கு முன்னுதாரணமாக திகழ்ந்த வாஜ்பாயின் மறைவு வேதனை அளிக்கிறது” என்று தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தெரிவித்துள்ளார்.
“நாட்டின் தலைசிறந்த தலைவர் மறைந்தது மிகவும் வேதனையளிக்கிறது” என்று நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்
மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு நேரில் சென்று இரங்கல் தெரிவிக்க, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஆகியோர் நாளை டில்லி செல்கின்றனர். மேலும், திமுக கட்சி செயல் தலைவர் ஸ்டாலின், தமிழக பாஜக தலைவர் தமிழிசை ஆகியோர் இன்றிரவு டில்லி செல்கின்றனர்.