Rain For Tamilnadu - தமிழக அளவில் வடகிழக்கு பருவமழையில் இடைவெளி விழுந்த நிலையில், இன்று மீண்டும் மழை பெய்ய ஆரம்பித்துள்ளது. சென்னையின் சில பகுதிகளிலும் நேற்று இரவு மற்றும் இன்று அதிகாலை நல்ல மழை பொழிவு இருந்தது. இந்நிலையில், தற்போது ஆரம்பித்துள்ள மழை எப்படியானதாக இருக்கும் என்பது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் (Tamilnadu Weatherman), பிரதீப் ஜான், விரிவாக அலசியுள்ளார்.
“சென்னையை நோக்கி அதிக மழை மேகங்கள் வரக் காத்திருக்கின்றன. இந்த மேகங்களால் அதிக மழை பொழிவு இருக்காது என்றாலும், குறைவான நேரத்தில் நல்ல மழையைக் கொடுக்கவல்லது.
சில நாட்களுக்கு முன்னர் சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் பெய்தது போல, இந்த மழை இருக்காது என்றாலும், நம்பிக்கையுடன் காத்திருக்கலாம்.
காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் மட்டுமல்ல, சென்னையிலிருந்து நெல்லை வரையுள்ள அனைத்து கடலோர மாவட்டங்களிலும் அடுத்த 3 நாளைக்கு மழை இருக்கும். இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் தான் இந்த இடங்களில் மழை பெய்ய அதிக வாய்ப்புள்ளது.
பகல் நேரத்தில், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், அரியலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் ஒருசில இடங்களில் மழை பெய்யலாம்.
ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது,” என்று தனது முகநூல் பக்கத்தில் தகவல் தெரிவித்துள்ளார் வெதர்மேன்.