"சென்னையைப் பொறுத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்."
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மழை வெளுத்து வாங்கி வரும் நிலையில், அடுத்த 2 நாட்களுக்கு மாநிலத்தில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து இந்திய வானிலை மையத்தின் சென்னை மண்டல இயக்குநர் புவியரசன், ‘வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள மேலடுக்கு சுழற்சியானது, அடுத்த 3 நாட்களில் தமிழகத்தை நோக்கி நகர்வதால், தமிழகம் மற்றும் புதுவையில் பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழையும், வடதமிழகத்தின் ஒரு சில மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழைக்கும் வாய்ப்புள்ளது. வரும் 25 ஆம் தேதி கடலோர மாவட்டம் மற்றும் தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னையைப் பொறுத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சிவகங்கை தேவக்கோட்டை, தர்மபுரி மாவட்டம் பாலக்கோட்டையில் 11 சென்டி மீட்டர் மழை பொழிந்துள்ளது.
வரும் 24, 25 தேதிகளில் குமரிக் கடல், தென் தமிழக கடலோரப் பகுதி மற்றும் மாலத்தீவு பகுதிகளில் வலுமையான சூரைக்காற்று வீச வாய்ப்புள்ளதால், அப்போது கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று மீனவர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்' என்று தெரிவித்துள்ளார்.