தேர்தல் முடிவுகள் ஜனவரி 2, 2020 அறிவிக்கப்படும்.
தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் தேதிகளை இன்று மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாமல் இருந்தது. இதுதொடர்பான வழக்கை அண்மையில் விசாரித்த உச்ச நீதிமன்றம், உள்ளாட்சித் தேர்தலுக்கான தேதியை டிசம்பர் 13ஆம் தேதிக்குள் அறிவிக்க வேண்டும் என்று மாநில தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டிருந்தது.
இதையடுத்து, உள்ளாட்சித் தேர்தலுக்கான தேதி டிசம்பர் 2ஆம் தேதி அறிவிக்கப்படும் என பலதரப்பினரும் எதிர்பார்த்து வந்தனர். இந்நிலையில் இன்று காலை தமிழக உள்ளாட்சித் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டது.
இதனை மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார். அதன்படி கிராமப்புற ஊராட்சித் தேர்தலுக்கான தேதி மட்டுமே அறிவிக்கப்பட்டது.
வேட்பு மனுத்தாக்கல் தொடங்கும் நாள்: டிசம்பர் 6
வேட்பு மனுத்தாக்கல் செய்ய கடைசி நாள்: டிசம்பர் 13
வேட்பு மனு திரும்ப பெற கடைசி நாள்: டிசம்பர் 18
முதல் கட்ட தேர்தல்: டிசம்பர் 27
இரண்டாம் கட்ட தேர்தல்: டிசம்பர் 30
தேர்தல் முடிவு: ஜனவரி 2, 2020
இதுகுறித்து மேலும், செய்தியாளர்களிடம் பேசிய மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி, உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை ஜனவரி 2-ம் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள வார்டு உறுப்பினர்கள் ஜனவரி 6-ம் தேதி பதவி ஏற்றுக்கொள்வார்கள்.
இதன்பின்னர், தேர்ந்தெடுக்கப்பட்ட வார்டு உறுப்பனர்கள் ஜனவரி 11-ம் தேதி மாநகராட்சி மேயர், நகராட்சி தலைவரை தேர்வு செய்வார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கிராம ஊராட்சிகளில் வாக்குச்சீட்டு மூலம் தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர் பதவிகளுக்கு ஜனவரி 11-ம் தேதி தேர்தல் நடைபெறும். மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கு தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லை. விரைவில் அறிவிக்கப்படும் என்று தெரிவித்தார்.