This Article is From Jul 31, 2018

தமிழகத்தைச் சேர்ந்த நபருக்கு தீவிரவாத சட்டத்தில் தண்டனை!

தேசிய புலனாய்வு அமைப்பின் நீதிமன்றத்தில், தமிழகத்தைச் சேர்ந்த நபருக்கு யு.ஏ.பி.ஏ தீவிரவாத சட்டத்திற்குக் கீழ் தண்டனை வழங்கப்பட்டுள்ளது

தமிழகத்தைச் சேர்ந்த நபருக்கு தீவிரவாத சட்டத்தில் தண்டனை!

தேசிய புலனாய்வு அமைப்பின் நீதிமன்றத்தில், தமிழகத்தைச் சேர்ந்த நபருக்கு யு.ஏ.பி.ஏ தீவிரவாத சட்டத்திற்குக் கீழ் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

தண்டனை வழங்கப்பட்டுள்ள முகமது சலீம் ராயபுரத்தைச் சேர்ந்தவர். இவர் இலங்கையில் இருக்கும் பாகிஸ்தான் தூதரகத்துடன் இணைந்து இந்தியாவுக்கு எதிராக தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட இருந்ததாகவும், கள்ள நோட்டு அடித்து புழக்கத்தில் விட்டு, குழப்பம் விளைவிக்க இருந்ததாகவும் குற்றம் சுமத்தப்பட்டு இருந்தது. இது தொடர்பாக சலீம் கைது செய்யப்படும் போது, அவரிடம் இருந்து 2.5 லட்சம் மதிப்பிலான கள்ள நோட்டு பறிமுதல் செய்யப்பட்டது. இந்த குற்றங்கள் நிரூபிக்கப்பட்ட பின்னர் சலீம், குறைந்தபட்ச தண்டனை கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கு விசாரணைதான் சென்னை, பூந்தமல்லியில் இருக்கும் என்.ஐ.ஏ நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இதையடுத்து, யு.ஏ.பி.ஏ சட்டத்தின் பிரிவு 16 மற்றும் 18-ன் கீழ் சலீமுக்கு 5 ஆண்டுகள் தண்டனை வழங்கப்பட்டது. இந்த வழக்கில் குறைந்தபட்ச தண்டனை இதுவேயாகும். அதிகபட்சமாக ஆயுள் தண்டனை வழங்கப்படும்.

2013 ஆம் ஆண்டு பிடிபட்ட ஐஎஸ்ஐ அமைப்பின் உளவாளி ஜாகிர் உசேனின் வழக்கில் தான் சலீமின் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இலங்கையில் இருக்கும் பாகிஸ்தான் தூதரகத்துடன் இணைந்து இந்தியாவுக்கு எதிராக தீவிரவாத செயல்களில் ஈடுபடுவது கண்டுபிடிக்கப்பட்ட குற்றமும் நிரூபிக்கப்பட்டது. அவருக்கு ஏற்கெனவே தண்டனை வழங்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் நிலையில், தற்போது அவருடன் இணைந்து வேலை பார்த்த சலீமுக்கும் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 2013 ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம் தான் ஜாகிர் உசேனை கைது செய்தது தமிழகத்தின் ‘க்யூ’ பிரிவு போலீஸ். அவர்கள் தேசிய புலனாய்வு அமைப்பிடம் உசேனை ஒப்படைத்தனர். அவர் மீது 2014 ஆம் ஆண்டு அக்டோபர் 23 ஆம் நாள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. 

அரசு சார்பில் இந்த வழக்கில் ஆஜராகி வாதாடிய வழக்கறிஞர் சி.எஸ்.எஸ்.பிள்ளை, ‘இந்த வழக்கில் இலங்கையில் இருக்கும் பாகிஸ்தானைச் சேர்ந்த அதிகாரிகள், இந்தியாவில் தீவிரவாத நடவடிக்கைகள் ஈடுபடுவதிலும், கள்ள நோட்டை புழக்கத்தில் விடுவதிலும் முனைப்புக் காட்டினர் என்பது தெளிவாக கண்டுபிடிக்கப்பட்டது’ என்று கூறியுள்ளார். 



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
.