உறுப்பினர்களின் அமளியால் மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது.
New Delhi: மாநிலங்களவையில் இன்று காவிரி விவகாரத்தை எழுப்பி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவை நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது.
நாடாளுமன்றத்தில் குளிர்கால கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் கடந்த சில நாட்களாக எதிர்க்கட்சிகள் ரபேல் விவகாரம், காவிரி பிரச்னை உள்ளிட்டவற்றை எழுப்பி அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அவை இன்று தொடங்கியபோது காவிரியின் குறுக்கே மேகதாதுவில் தடுப்பணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர். இதேபோன்று ரபேல் விவகாரத்தை எழுப்பி, அதுதொடர்பாக நாடாளுமன்ற கூட்டு நடவடிக்கை குழுவை ஏற்படுத்த வேண்டும் என்று காங்கிரஸ் எம்பிக்கள் போர்க்கொடி உயர்த்தினர்.
இதனால் அவை அலுவல்கள் ஏதும் நடைபெறவில்லை. உறுப்பினர்களை அமைதி காக்கும்படி அவைத் தலைவர் வெங்கையா நாயுடு கோரிக்கை வைத்தார். இதை எதுவும் உறுப்பினர்கள் கேட்கவில்லை.
வெங்கையா நாயுடு பேசும்போது, '' மிக முக்கியமான மசோதாக்கள் நிறைவேற்றப்படாமல் நிலுவையில் உள்ளன. சில மாநிலங்களை புயல் தாக்கியிருக்கிறது. அதுபற்றி பேச வேண்டும்'' என்று கூறினார்.
பின்னர் உறுப்பினர்களை பார்த்து நீங்கள் செய்வது அனைத்தையும் மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்று கூறி அவையை ஒத்தி வைத்தார்.