"சுகாதார பேரிடர் தகவல் பரிமாற்றத்தை குறிப்பாக தலைவர்கள் மிகவும் கவனமுடன் கையாள வேண்டும்!"
ஹைலைட்ஸ்
- தமிழகத்தில் இதுவரை 12 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது
- மதுரையில் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்துள்ளது
- இன்று மாலை முதல் தமிழகத்தில் 144 தடை உத்தரவு அமலுக்கு வருகிறது
தமிழகத்தில் இதுவரை 12 பேர் கொரோனா வைரஸ் தொற்று காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் போட்ட பதிவு ஒன்றில் ‘வதந்தி' பரப்பப்பட்டுள்ளதா எனச் சந்தேகம் எழுப்பியுள்ளார் தமிழக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி.
முன்னதாக மு.க.ஸ்டாலின், தன் சமூக வலைத்தள பக்கத்தில், “தமிழகத்தில் கொரோனா வைரஸால் 9 பேர் உயிரிழப்பு, 8000 பேருக்கு பாதிப்பு, சென்னை உள்ளிட்ட 3 மாவட்டங்களைத் தனிமைப்படுத்த மத்திய அரசு அறிவுறுத்தல் ஆகியவை மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
எனவே தமிழக அரசு மக்களுக்கு நம்பிக்கையூட்டும் நடவடிக்கைகளில் முழுவீச்சில் ஈடுபட வேண்டும்,” என்று குறிப்பிட்டு நீண்ட அறிக்கையை வெளியிட்டிருந்தார். 9 பேருக்கு கொரோனா பாதிப்பு என்பதற்குப் பதில் ஸ்டாலின், 9 பேர் உயிரிழந்துள்ளதாகத் தவறாகப் பதிவிட்டிருந்தார். இதனால் அவரின் பதிவு உடனடியாக நீக்கப்பட்டது.
ஆனால், ஸ்டாலினின் பதிவை மேற்கோள்காட்டி, அமைச்சர் வேலுமணி, “தமிழகத்தில் கொரோனாவால் 9 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 9 பேர் இறந்ததாக திமுக தலைவர் ட்விட்டரில் வதந்தி பதிவு செய்து நீக்கியுள்ளது, பதற்றம் உண்டாக்கும் முயற்சியா என்ற சந்தேகத்தை எழுப்புகிறது. சுகாதார பேரிடர் தகவல் பரிமாற்றத்தைக் குறிப்பாகத் தலைவர்கள் மிகவும் கவனமுடன் கையாள வேண்டும்!,” என்று அறிவுரை வழங்கியுள்ளார்.